கடலூர், ஏப். 25: சென்னையில் இருந்து மன்னார்குடி நோக்கி சென்ற தனியார் பஸ்சில் ரூ.40 லட்சம் ஹவாலா பணம் எடுத்து வந்த நபரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பண்ருட்டி மதுவிலக்கு பிரிவு தலைமை காவலர் தேவேந்திரன், கடலூர் ஆயுதப்படை காவலர் அசோக் குமார் ஆகியோர் நேற்றுமுன்தினம் நள்ளிரவு கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சென்னையில் இருந்து மன்னார்குடி நோக்கி சென்ற ஒரு தனியார் பேருந்தை நிறுத்தி அதில் இருந்த பயணிகளிடம் சோதனை நடத்தினர். அப்போது அதில் வந்த ஒரு வாலிபர் வைத்திருந்த பையில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது. அப்போது போலீசார் அந்த வாலிபரிடம், பணத்துக்கு உரிய ஆவணங்களை கேட்டபோது அவரிடம் எந்தவிதமான ஆவணங்களும் இல்லை. இதையடுத்து போலீசார் அவரை கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாலிபர் சென்னையை சேர்ந்த முகமது மிதார் மகன் நவீத் அன்வர் (26) என்பது தெரியவந்தது. மேலும் அவர் ரூ.40 லட்சம் ஹவாலா பணம் எடுத்து வந்ததும் தெரியவந்தது. மேலும் இதுபோல அவர் பலமுறை ஹவாலா பணம் கொண்டு சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அந்த பணம் குறித்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பணத்தை வருமான வரி துறையிடம் போலீசார் ஒப்படைத்துள்ளனர்.
The post மன்னார்குடிக்கு சென்ற பேருந்தில் ரூ.40 லட்சம் ஹவாலா பணம் கொண்டு வந்த வாலிபர் போலீசார் தீவிர விசாரணை appeared first on Dinakaran.