*மைத்துனர் கைது 5 பேருக்கு வலை
மன்னார்குடி : மன்னார்குடி அருகே தங்கையுடன் சேர்ந்து வாழாத கணவரை கல்லால் அடித்து கொலை செய்த மைத்துனரை போலீசார் கைது செய்தனர். இக்கொலை தொடர்பாக போலீசார் மேலும் 5 நபர்களை தேடி வருகின்றனர்.திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த வடபாதிமங்கலம் மாயனூரை சேர்ந்தவர் ரோபோட் (எ) சோமசுந்தரம் (33).
அதே பகுதியை சேர்ந்தவர் சுபலட்சுமி (25). இவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. கணவன் – மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் கடந்த 8 மாதமாக பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. சுபலட்சுமியின் அண்ணன் சிவநேசன் (28), தனது தங்கையுடன் கணவர் சேர்ந்து வாழாததால் சோமசுந்தரம் மீது கோபத்தில் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் சோமசுந்தரம் உறவுக்கார பெண் ஒருவர் இறந்து ஓராண்டு நினைவுதினத்தையொட்டி தனது நண்பர்களுடன் சேர்ந்து நேற்றுமுன்தினம் நள்ளிரவு வடபாதிமங்கலம் பகுதியில் அஞ்சலி சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். அப்போது அங்கு வந்த சிவநேசனுக்கும், சோமசுந்தரத்திற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அங்கிருந்தவர்கள் இருவரையும் விலக்கி விட்டுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை வடபாதிமங்கலம் தெற்கு வீதியில் ரோபோட் (எ) சோமசுந்தரம் உடல் முழுவதும் ரத்த காயத்துடன் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த எஸ்பி கருண் கரட், டிஎஸ்பி மணிகண்டன், வடபாதிமங்கலம் இன்ஸ்பெக்டர் ராணி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதில், 6பேர் கொண்ட கும்பல், ஆயுதங்கள் மற்றும் கல்லால் தாக்கி சோமசுந்தரத்தை படுகொலை செய்தது தெரியவந்தது.
பின்னர் போலீசார், சோமசுந்தரத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த கொடூர கொலை குறித்து வடபாதி மங்கலம் போலீசார் வழக்கு பதிந்து, சிவனேசனை கைது செய்தனர். மேலும் இந்த கொலை தொடர்பாக 5 நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
The post மன்னார்குடி அருகே மனைவியுடன் சேர்ந்து வாழாததால் தங்கையின் கணவர் கல்லால் அடித்து கொலை appeared first on Dinakaran.