
பிலாஸ்பூர்,
சத்தீஷ்கார் மாநிலம் பஸ்தார் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் தனது மனைவியுடன் இயற்கைக்கு மாறான தாம்பத்திய உறவு கொண்டதால், அவருடைய மனைவி உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தார். அவர் கொடுத்த மரண வாக்குமூலம் அடிப்படையில், அவரது கணவரை கடந்த 2017-ம் ஆண்டு போலீசார் கைது செய்தனர்.
பின்னர் இது தொடர்பான வழக்கு ஜக்தல்பூர் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டு இருந்த கணவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து பிலாஸ்பூரில் உள்ள ஐகோர்ட்டில் அவர் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கு விசாரணை நிறைவடைந்ததை தொடர்ந்து நீதிபதி தீர்ப்பளித்தார். அவர் தனது தீர்ப்பில், 2013-ம் ஆண்டு இந்திய தண்டனை சட்டப்பிரிவு 315-ல் செய்யப்பட்ட திருத்தத்தின்படி, குற்றம் சாட்டப்பட்டவரின் செய்கை குற்றமாக கருதமுடியாது. குறிப்பிட்ட வயதுக்கு மேல் உள்ள மனைவியுடன், கணவர் செய்யும் எந்த ஒரு பாலியல் செயலும், பாலியல் வன்கொடுமையின் கீழ் வராது. சம்மதம் முக்கியமில்லை. மனைவியுடன் இயற்கைக்கு மாறான தாம்பத்திய உறவு குற்றமல்ல. எனவே குற்றம் சாட்டப்பட்டவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று தீர்ப்பு கூறினார்.