
புனே,
மனைவி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகித்த நபர் ஒருவர் தனது 3 வயது மகனை கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் மாதவ் திகேட்டி. இவரது மனைவி ஸ்வரூபா. இந்த தம்பதிக்கு ஹிம்மத் (3 வயது) என்ற மகன் இருந்தான். இவர்கள் தற்போது மராட்டிய மாநிலம் புனேவில் வசித்து வருகின்றனர். மாதவ் திகேட்டிக்கு, அவரது மனைவி ஸ்வரூபாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக அடிக்கடி இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மாதவ் தனது மகனுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். நீண்ட நேரமாகியும் இருவரும் வீடு திரும்பாததால் பதற்றம் அடைந்த ஸ்வரூபா சந்தன் நகர் போலீசில் இதுகுறித்து புகாரளித்துள்ளார்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். மாதவின் செல்போன் சிக்னல் மூலம் அவர் ஒரு லாட்ஜில் இருப்பது தெரியவந்தது. அங்கு சென்று பார்த்தபோது அவர் குடிபோதையில் இருந்தார். அவருடன் மகன் ஹிம்மத் இல்லை. இதையடுத்து மாதவை காவலில் எடுத்து விசாரித்தபோது, மகனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். சந்தன் நகர் அருகே உள்ள ஒரு காட்டுப் பகுதிக்கு மகனை அழைத்துச் சென்று அங்கு வைத்து கழுத்தை அறுத்து கொலை செய்ததாக தெரிவித்தார்.
அவர் சொன்ன இடத்தில் இருந்து சிறுவனின் உடல் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாதவ் மீது கொலை வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.