வாஷிங்டன்: அமெரிக்காவில் தனது மனைவி, மூத்த மகனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு, கர்நாடகா தொழிலதிபர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். கர்நாடகா மாநிலம் மண்டியா மாவட்டத்தை சேர்ந்த தொழிலதிபர் ஹர்ஷவர்தனா கிக்கேரி (57). இவர் தனது மனைவி ஸ்வேதா பன்யம் (44), மகன் துருவா கிக்கேரி (14), மற்றொரு 8 வயது மகனுடன் அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலம், நியூகேஸில் பகுதியில் வசித்து வந்தார்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் ரோபோட்டிக்ஸ் துறையில் பணியாற்றிய இவர் கடந்த 2017ம் ஆண்டு, இந்தியாவுக்குத் திரும்பி, மைசூரின் விஜயநகரில் ‘ஹோலோவேர்ல்டு’ என்ற ரோபோட்டிக்ஸ் நிறுவனத்தை துவங்கினார். ஸ்வேதா நிறுவனத்தின் தலைவராகவும், ஹர்ஷவர்தனா தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பணியாற்றினர். கொரோனா காலகட்டத்தில் ஏற்பட்ட நெருக்கடியால் ஹோலோவேர்ல்டு நிறுவனம் மூடப்பட்டது. தொடர்ந்து, ஹர்ஷவர்தனா தனது குடும்பத்தினருடன் மீண்டும் அமெரிக்காவிற்குத் திரும்பினர்.
இந்நிலையில் நியூகேசில் வீட்டில் இருந்த ஹர்ஷவர்தனா கிக்கேரி, தனது மனைவி ஷ்வேதா பன்யம், அவர்களது மூத்த மகன் துருவா கிக்கேரி ஆகியோரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துவிட்டு, பின்னர் தானும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் கடந்த வாரம் நடந்தது. தகவலறிந்த போலீசார், மூன்று உடல்களையும் கைப்பற்றி கிங் கவுண்டி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த துயர சம்பவம் நடந்த போது, தம்பதியினரின் 8 வயது இளைய மகன் வீட்டில் இல்லாததால் உயிர் தப்பினார். இதற்கு, குடும்ப பிரச்னை காரணமா? தொழிலில் ஏற்பட்ட நஷ்டமா? என போலீசார் விசாரிக்கின்றனர்.
The post மனைவி, மகனை சுட்டுக் கொன்றுவிட்டு கர்நாடகா தொழிலதிபர் தற்கொலை: அமெரிக்காவில் பயங்கரம் appeared first on Dinakaran.