மனைவி கொலை வழக்கில் ஜாமீனில் வந்தவர் தற்கொலை மகன்கள் ஏற்காததால் விரக்தி பள்ளிகொண்டா அருகே

1 hour ago 1

பள்ளிகொண்டா, நவ.29: பள்ளிகொண்டா அருகே மனைவியை கொன்ற வழக்கில் ஜாமீனில் வந்தவர், மகன்கள் ஏற்க மறுத்ததால் விரக்தியடைந்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரி கொல்லைமேடு பகுதியை சேர்ந்தவர் ராமு(46), கூலித்தொழிலாளி. இவரது மனைவி ராதா. தம்பதிக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர். மகளுக்கு திருமணமாகிவிட்டது. இந்நிலையில் ராமு, மனைவி ராதாவுடன் காட்பாடி அருகே வள்ளிமலை கோட்டநத்தத்தில் உள்ள மாமியார் வீட்டில் தங்கி இருவரும் கட்டிட வேலை செய்து வந்தனர். கடந்த ஜூன் மாதம் 9ம் தேதி வேலை செய்து கொண்டிருந்தபோது ராமுவுக்கும், மனைவி ராதாவுக்கும் இடையே குடும்ப தகராறு காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராமு, தனது மனைவியை வெட்டிக்கொன்றார்.

இதுதொடர்பாக காட்பாடி போலீசார் வழக்குப்பதிந்து ராமுவை, கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, கடந்த மாதம் ஜாமீனில் வந்த ராமு, கந்தனேரியில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு சென்று வசிக்க தொடங்கினார். ஆனால் தங்களது தாயை கொன்றதற்காக அவரை ஏற்க மறுத்து மகன்கள் வீட்டிலிருந்து வெளியேறிவிட்டார்களாம். இதனால் மன விரக்தியடைந்த ராமு தினமும் அதிக மது அருந்தி வந்தாராம். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டிலிருந்து வெளியே சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. பின்னர் நேற்று காலை அருகிலுள்ள ஒரு விவசாய நிலத்தில் மரத்தில் ராமு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அப்பகுதியினர் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த பள்ளிகொண்டா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post மனைவி கொலை வழக்கில் ஜாமீனில் வந்தவர் தற்கொலை மகன்கள் ஏற்காததால் விரக்தி பள்ளிகொண்டா அருகே appeared first on Dinakaran.

Read Entire Article