மனு அளித்த சில நிமிடங்களில் மாற்றுத்திறனாளிக்கு சக்கர நாற்காலி

4 hours ago 3

திருவள்ளூர், மே 20: திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலெக்டர் மு.பிரதாப் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் 314 மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர். மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். பின்னர் மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் குன்னவலம் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பயனாளி புருஷோத்தமன் சக்கர நாற்காலி வேண்டி மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தார். மனு கொடுத்த சில நிமிடங்களில் அவருக்கு கலெக்டர் ரூ.15,750 மதிப்பீட்டில் சக்கர நாற்காலியை வழங்கினார்.

தொடர்ந்து, திருவள்ளூர் வட்டம் பெருமாள் பட்டு கிராமத்தைச் சேர்ந்த மு.பிரனேஷ் கடந்த 29.8.2021 அன்று கிருஷ்ணா கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்ததையடுத்து, அவரது தாயார் லதாவிடம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதி ரூ.1 லட்சத்திற்கான காசோலையை கலெக்டர் வழங்கினார். இதில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வெங்கட்ராமன், தனித்துணை கலெக்டர் (சபாதி) பாலமுருகன், திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர்கள் உஷாராணி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post மனு அளித்த சில நிமிடங்களில் மாற்றுத்திறனாளிக்கு சக்கர நாற்காலி appeared first on Dinakaran.

Read Entire Article