மனித உயிரோடு விளையாட வேண்டாம்; சேதமடைந்த ஆனந்தூர் நூலகத்தை உடனடியாக மூட வேண்டும் : உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

3 months ago 23

மதுரை : ராமநாதபுரம் மாவட்டம் ஆனந்தூரில் உள்ள நூலகத்தை உடனடியாக மூட உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஆனந்தூரில் இடிந்த கட்டிடத்தில் உள்ள நூலகத்தை இடித்து அப்புறப்படுத்த உத்தரவிடக்கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. ராமநாதபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் கலந்தர் ஆசிக் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், “திருவாடானை அருகேயுள்ள ஆனந்தூா் கிராமத்தில் பல ஆண்டுகளாகக் கிளை நூலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. மேலும், 100-க்கும் மேற்பட்ட வாசகா்களும் உள்ளனா்.

இந்தப் பகுதி சிறுவா்கள் முதல் முதியவா்கள் வரை தினந்தோறும் இந்த நூலகத்தில் படிப்பது வழக்கம். தற்போது, இந்த நூலகக் கட்டடம் சேதமடைந்து காணப்படுகின்றன. நூலகம் பராமரிப்பின்றி உள்ளதால் மழை காலத்தில் மேற்கூரையில் இருந்து தண்ணீர் ஒழுகி புத்தகங்கள் சேதமாகின்றன. ஆபத்தான நிலையில் கட்டிடம் உள்ளதால் நூலகத்துக்கு வர வாசகா்கள் அச்சப்படுகின்றனா்..எனவே ஆனந்தூரில் உள்ள நூலகத்தை இடிக்க உத்தரவிட வேண்டும்,”இவ்வாறு கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த மனு மீதான இன்றைய விசாரணையின் போது, நூலக கட்டிடம் இடிந்து பாதுகாப்பற்ற நிலையில் உள்ள புகைப்படங்களை மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் தாக்கல் செய்தார். இதனை பரிசீலித்த நீதிபதிகள்,”மனித உயிரோடு விளையாட வேண்டாம்; கட்டிடம் மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் நூலகத்தை உடனே மூட உத்தரவிடுகிறோம். பராமரிப்பு பணி செய்யப் போகிறீர்களா? அல்லது புதிய கட்டிடம் கட்டப் போகிறீர்களா? என்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட நூலகர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும், “இவ்வாறு உத்தரவிட்டு வழக்கை தள்ளிவைத்தனர்.

The post மனித உயிரோடு விளையாட வேண்டாம்; சேதமடைந்த ஆனந்தூர் நூலகத்தை உடனடியாக மூட வேண்டும் : உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!! appeared first on Dinakaran.

Read Entire Article