மனவேதனையில் கடிதம் எழுதிவிட்டு தூக்கில் தொங்கிய அண்ணன் போலீசார் விசாரணை தங்கையின் காதலை தட்டிக்கேட்டதால் பிரச்னை

3 months ago 21

கே.வி.குப்பம், அக்.11: தங்கையின் காதலை தட்டிக்கேட்டதால் ஏற்பட்ட பிரச்னையில் மனவேதனை அடைந்த அண்ணன் கடிதம் எழுதிவிட்டு தூக்கில் சடலமாக தொங்கினார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் அடுத்த அங்கராங்குப்பம் ஊராட்சி, சூரங்குப்பம் மேடு கிராமத்தை சேர்ந்தவர் சதாசிவம் (65). இவருக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இளைய மகன், மகளுக்கு திருமணம் நடந்து முடிந்த நிலையில் மூத்த மகனான பெயின்டர் வேலை செய்து வரும் சிவக்குமார்(36) என்பவருக்கு திருமணமாகவில்லையாம். மேலும், சிவக்குமார் சரிவர வேலைக்கு செல்லாமல் மது பழக்கத்திற்கு அடிமையாக இருந்துள்ளார்.
இந்நிலையில், சிவக்குமாருக்கு தங்கை முறையான 20 வயது இளம் பெண், ஒரு வாலிபரை காதலித்து வந்துள்ளார். மேலும், இருவரும் கடந்த 8ம் தேதி திருமணம் செய்து கொள்ள இருந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த சிவக்குமார், தனது தங்கையிடம் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மனமுடைந்த சிவக்குமார் நேற்று முன்தினம் இரவு முழுவதும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு சென்று தூங்கினாராம்.

நேற்று காலை வழக்கம்போல் அவரது குடும்பத்தினர் வீட்டின் பின்புறம் சென்றுள்ளனர். அப்போது மரத்தில் சிவக்குமார் தூக்கில் சடலமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக பனமடங்கி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதனடிப்படையில், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயந்தி தலைமையிலான போலீசார் விரைந்து வந்து சடலத்தை மீட்டனர். அப்போது சிவக்குமாரின் சட்டை பையில் கடிதம் ஒன்று இருந்தது. அதில், ‘என் சாவுக்கு காரணம் என் தங்கை, அவரது காதலன், தங்கையின் தோழி’ என குறிப்பிட்டிருந்தது. தொடர்ந்து போலீசார் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில், சிவக்குமாரின் கழுத்து, இடுப்பு பகுதியில் சிறிய வெட்டு காயம் இருந்ததாகவும், இதனால் சிவக்குமார் சாவில் சந்தேகம் உள்ளதாகவும் உறவினர்கள் போலீசாரிடம் கூறினர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post மனவேதனையில் கடிதம் எழுதிவிட்டு தூக்கில் தொங்கிய அண்ணன் போலீசார் விசாரணை தங்கையின் காதலை தட்டிக்கேட்டதால் பிரச்னை appeared first on Dinakaran.

Read Entire Article