ஒரு குடும்பத்தில் அக்கா தம்பி இருவர் இருந்தனர். ஒருமுறை பெற்றோர் வௌியே சென்றிருந்த நேரம், தன் தந்தை வாங்கிக் கொடுத்த விளையாட்டுத் துப்பாகியால் வீட்டிலிருந்த கோழியை சிறுவன் கொன்றுவிட்டான். அதை அக்கா பார்த்துவிட்டாள். அன்று முதல் அக்கா தன் தம்பியை ஒரு அடிமையைப் போல வேலை வாங்க ஆரம்பித்தாள். தன் வேலையும் சேர்த்து செய்ய வைத்தாள். சிறுவனுக்கு அழுகையும் கோபமும் வந்தாலும், எங்கே பெற்றோரிடம் சொல்லி தனக்கு தண்டனை வாங்கி தருவாளோ என பயந்து அவளுக்கு கீழ்ப்படிந்து செய்து வந்தான். ஒருமுறை அக்காவின் அடக்குமுறை எல்லை மீறவே இனிமேல் தந்தையிடம் அடிவாங்கினாலும் பரவாயில்லை இனிமேல் அக்காவிடம் அடிமைப்பட வேண்டாம் எனக் கருதி தந்தையிடம் நேரே சென்றான், இவன் தயங்கித் தயங்கி நிற்பதை கண்ட தந்தை அவனை அன்போடு அழைத்து விசாரித்தார்.
அவன் உண்மையை தன் தந்தையிடம் சொல்லவே ‘‘நீ இதற்காகவா இவ்வளவு நாள் கஷ்டப்பட்டாய்? அருகில் வா, நீ என்னிடம் உண்மையை கூறிய இந்த வினாடி உன்னை மன்னித்து, அச்செயலை மறந்து ஏற்றுக்கொள்கிறேன். இனி நீ எதையும் மறைக்கக் கூடாது’’ எனச்சொல்லி, அவனை அணைத்து அவனுக்கு தேவையானதை வாங்கிகொடுத்தார்.
இறைமக்களே, ‘‘தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்துவிட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்’’ (நீதிமொழிகள் 28:13) என இறைவேதம் கூறுகிறது.
பாவம் செய்தது மட்டும் குற்றமல்ல, பாவத்தை மறைப்பது அதனினும் பெரும்குற்றமாகும். ஒரு தவறை மறைக்க ஆயிரம் பொய் சொல்லி வேதனையின் பாரத்தை அதிகரிக்கச்செய்வது பரிதாபத்திற்குரியதல்லவா? நீங்கள் ஆண்டவரிடத்தில் உண்மையாக இருக்கும்போதும், நீங்கள் யதார்த்தமாக இருக்கும்போதும், நீங்கள் உண்மையில் என்னை உணருகிறீர்கள் என்பதை அவருடன் பகிர்ந்துகொள்ளும்போது, அவர் அதில் பிரியப்படுகிறார். நீங்கள் காயப்பட்டிருக்கிறீர்களா? அல்லது பாடு அனுபவித்துக்கொண்டிருக்கிறீர்களா? குற்றமனசாட்சி உங்களை நிலைகுலையச் செய்கிறதா? எல்லாவற்றையும் அவரிடம் சொல்லிவிடுங்கள். என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறுவதாக உணர்கிறீர்களா? கைவிடப்பட்டதாக உணர்கிறீர்களா? காட்டிக் கொடுக்கப்பட்டதாக உணர்கிறீர்களா? உன் இருதயத்தை கர்த்தரிடத்தில் வெளிப்படுத்திக் காட்டுங்கள்.
உங்கள் கண்ணீரையும் அவரிடத்தில் வைத்துவிடுங்கள். அவர் உங்களுக்கு செவிசாய்க்கவும், மீண்டும் வாக்குப்பண்ணவும், உங்களுக்கு ஆறுதல் அளிக்கவும் விரும்புகிறார்.
‘‘பாவ சஞ்சலத்தை நீக்க பிராண நண்பர்தான் உண்டே’’ என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப, கொடியவரிடத்தில் சிக்கி தவிப்பதைவிட தேவனிடம் ஒப்புரவாகி புதுவாழ்வு வாழ்வோம்!
– அருள்முனைவர்: பெ.பெவிஸ்டன்
The post மனம் திறந்து பேசுங்கள்… appeared first on Dinakaran.