மனமென்னும் விளக்கு ஒளிரட்டும்

2 hours ago 3

இரண்டு பேர் இரவில் ஒரு வனத்தில் நடந்து போய்க்கொண்டிருந்தார்கள். ஒருவரிடம் விளக்கு இருந்தது. இன்னொருவரிடம் விளக்கு இல்லை. ஆனால், அவர்கள் இருவரும் ஒரே பாதையில் நடந்து சென்றதால் அவர்களின் பாதை வெளிச்சமாகவே இருந்தது. தனக்கென்று விளக்கு இல்லாத பயணியும் அந்த விளக்கின் வெளிச்சத்தினால் சந்தோஷமாகவே இருந்தான். அவனுக்கு தன்னிடம் விளக்கு இல்லை என்ற உணர்வு கொஞ்சம் கொஞ்சமாக அவன் சிந்தனையிலிருந்து மறைந்தது.அவர்கள் இருவரும் ஒரு கூட்டுச் சாலைக்கு வந்து சேர்ந்தனர். வேறுவழியின்றி இருவரும் பிரிய வேண்டியிருந்தது. விளக்கை வைத்திருந்தவன் விடைபெற்றுச் சென்றான். கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கே திடீரென்று இருள் சூழ்ந்தது. இப்போதுதான் விளக்கில்லாத அந்த மனிதனைக் கவலை சூழ்ந்தது. காரிருள் சாலையில் மட்டுமல்லாது, அவனது மனதையும் பற்றிக்கொண்டது, ‘‘ஒரு விளக்கை என்னால ஏற்பாடு செய்து கொள்ள முடியாமல் போனதே’’ எனப்புலம்பி அழத் தொடங்கினான்.எல்லாம் சரியாகப் போய்க்கொண்டிருப்பதாக நான் நினைத்தேன். வந்த வழி வெளிச்சமாகத்தானே இருந்தது. ஆனால் இப்போது? மிகச் சிறிய விளக்காக இருந்தாலும் அது என்னுடையதாக இருந்திருக்க வேண்டும் என்ற புரிதல் அப்பொழுதுதான் அவன் புத்தியில் எட்டியது.

இறைமக்களே, இப்படித்தான் பல முறை நடக்கிறது. அகத்தில் விளக்கொளிரும் ஒருவரை நீங்கள் பார்க்கும்போது உடனடியாக ஒரு கதவு திறக்கலாம். உங்கள் பாதையெங்கும் சுடரேற்றப்படலாம். ஆனால், அது உங்களுடைய விளக்கு அல்ல என்ற புரிதலும் எச்சரிப்பும் தேவை. இல்லையெனில் அந்த விளக்கு பறிபோகும் போது உங்கள் மனதை காரிருள் துன்புறுத்தத் தொடங்கும். மீண்டும் அந்த ஒளிச்சுடர் அந்த பாதைக்குத் திரும்பச் செல்வதைப் பற்றிய எண்ணம் உங்களைத் துரத்தும். ஆனால், நீங்கள் முன்னோக்கித்தான் செல்ல வேண்டும். உங்கள் சொந்த பாதையில்தான் நீங்கள் பயணம் செய்ய வேண்டும். ஆகவே காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்ற பொன்மொழிக்கேற்ப இப்பொழுதே உங்கள் விளக்கைச் சீர்படுத்துங்கள். விளக்குகள் பலவிதம், அதில் ஒவ்வொன்றும் ஒருவிதம். ஆகவே உங்களைப் பிறரோடு ஒப்பிடாமல் உங்கள் விளக்கு ஒளிர்வதில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.‘‘உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி (யோவான் 1:9) என இறைவேதம் இறைவனாகிய இயேசுகிறிஸ்துவைக் குறித்து சாட்சியிடுகிறது. ஆகவே தீபஒளி பண்டிகை நாட்களில் நாட்டிலும் வீட்டிலும் மட்டுமல்ல, நம் மனதிலும் தீபமே(ற்)ற நாம் விரும்புவது நலம். நம் மனம் பிரகாசித்தால் குணம் பிரகாசிக்கும். குணம் பிரகாசித்தால் குடும்பம் பிரகாசிக்கும். ஒவ்வொரு குடும்பமும் பிரகாசித்தால் பார் நிலமே பிரகாசிக்கும். ஆகவே தீபஒளித் திருநாளில் அணையாத மெய்தீபத்தை மனதில் ஏற்றுவோம்.
– அருள்முனைவர். பெ.பெவிஸ்டன்.

The post மனமென்னும் விளக்கு ஒளிரட்டும் appeared first on Dinakaran.

Read Entire Article