
போபால்,
மத்திய பிரதேச மாநிலம் போபால் மாவட்டம் கவுதம் நகரை சேர்ந்தவர் அபிஷேக் பசாலி (வயது 25). தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்துவந்த இவர் ஐஸ்பக் பகுதியை சேர்ந்த பெண்ணை காதலித்து கடந்த 4 ஆண்டுகளுக்குமுன் திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு பெண் குழந்தை உள்ளது.
இதனிடையே, அபிஷேக்கிற்கும் அவரது மனைவிக்கும் கடந்த சில மாதங்களாக இடையே அடிக்கடி சண்டை நிலவி வந்துள்ளது. மனைவி மற்றும் மாமியார் சேர்ந்துகொண்டு அபிஷேக்கிற்கு மனரீதியில் தொல்லை கொடுத்துள்ளனர். மேலும், கணவன் தன்னை கொடுமைபடுத்துவதாக அபிஷேக் மீது அவரது மனைவி ஏற்கனவே புகார் அளித்துள்ளார். அந்த புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், அபிஷேக்கிற்கும் அவரது மனைவிக்கும் இடையே நேற்று முன் தினம் மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அபிஷேக் தனது மனைவி மற்றும் குழந்தையை மாமியார் வீட்டில் விட்டுள்ளார். பின்னர், தன் வீட்டிற்கு வந்த அபிஷேக் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தற்கொலை செய்வதற்குமுன் செல்போனில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில், மனைவியும், மாமியாரும் மனரீதியில் தொல்லை கொடுப்பதால் தற்கொலை செய்வதாக கூறியுள்ளார். இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகியுள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார் அபிஷேக்கின் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். அங்கு அவர் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதையடுத்து அபிஷேக்கின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.