காஞ்சிபுரம் மாநகராட்சியின் மையப் பகுதியின் வழியாக ஓடும் மஞ்சள் நீர் கால்வாயை தூர்வாருவதில் போதிய கவனம் செலுத்தப்படவில்லை. கால்வாயில் ஆங்காங்கே அதிக அடைப்புகள் இருப்பதால் பெருமழை பெய்தால் கழிவுநீர் மற்றும் மழைநீர் முறையாக வெளியேறாமல் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் புகும் அபாயம் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
மஞ்சள் நீர் கால்வாய் என்பது காஞ்சிபுரம் மாநகராட்சியின் மையப் பகுதி வழியாக ஓடும் மழைநீர் கால்வாய் ஆகும். இந்த கால்வாய் வேகவதி ஆற்றில் இருந்து பிரிந்து தாமல், புத்தேரி, சாலபோகம் கிராமப்பகுதிகள் வழியாக வந்து காஞ்சிபுரம் மாநகராட்சியில் கைலாசநாதர் கோயில் பகுதி, கிருஷ்ணன் தெரு, காமராஜர் வீதி, ரயில்வே சாலை மற்றும் திருக்காளிமேடு பகுதி வழியாகச் சென்று நத்தப்பேட்டை ஏரியில் கலக்கிறது.