
சென்னை,
2025-2026-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் கடந்த மாதம் (பிப்ரவரி) 1-ந் தேதி நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிலையில், 13-ந் தேதி வரை நடைபெற்ற பட்ஜெட் கூட்டத் தொடர் முதல் அமர்வில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்து முடிந்தது.
இந்த நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் மும்மொழி கொள்கைக்கு தி.மு.க. எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அது தொடர்பாக, தி.மு.க. எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் பேசியதற்கு மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் ஆவேசமாக பதில் அளித்தார். அவர் பேசும்போது, "பி.எம். ஸ்ரீ திட்டத்தை தமிழக முதல்-அமைச்சர் ஏற்றுக்கொண்டார். ஆனால், அதன் பிறகு ஒரு சூப்பர் முதல்-அமைச்சர் நிலைப்பாட்டை மாற்றி உள்ளார். பி.எம். ஸ்ரீ திட்டத்தை நிராகரிக்கும் முடிவை எடுத்த தமிழ்நாட்டின் சூப்பர் முதல்-அமைச்சர் யார்?" என்ற கேள்வியை முன்வைத்தார்.
இதற்கு தி.மு.க. எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டதால் அரை மணி நேரம் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் கூறிய சூப்பர் முதல்-அமைச்சர் யார் என்ற கேள்விக்கு விடை கிடைக்குமா? என்று பலர் அலசி ஆராய்ந்தனர்.
இதுகுறித்து, தி.மு.க. தரப்பிலேயே கேட்டபோது, "தமிழக அரசின் நிதித் துறை முதன்மை செயலாளர் உதயசந்திரனை மனதில் வைத்துத்தான் மத்திய மந்திரி அவ்வாறு கருத்து தெரிவித்தார்" என்று பதில் கிடைத்தது.
அன்றைக்கு, "யார் அந்த சார்?" என்று கேள்வி எழுப்பி அ.தி.மு.க. பரபரப்பை ஏற்படுத்தியது. இன்றைக்கு "சூப்பர் முதல்-அமைச்சர் யார்?" என்ற கேள்வி அதையும் தாண்டிய பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.