மத்திய மந்திரி அமித்ஷாவுடன் அமைச்சர் பெரியகருப்பன் சந்திப்பு

2 hours ago 2

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது கூட்டுறவுத்துறை தொடர்பான கோரிக்கை மனுவை அமித்ஷாவிடம் அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.

கோரிக்கை மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-

விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கி (NABARD) வழங்கும் சலுகை மறுநிதியளிப்பு, மாநிலத்தில் உள்ள கூட்டுறவுகளின் ஒட்டுமொத்த குறுகிய கால கடன் அளவிற்கேற்ப உயர்த்தி வழங்கப்பட வேண்டும். கூட்டுறவு சங்கங்களின் வருமான வரி TDS பிடித்தங்களிலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும். தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகம் மூலம் ஒருங்கிணைந்த கூட்டுறவு வளர்ச்சித் திட்டம் போன்ற திட்டங்கள் நியாயமான வட்டி விகிதத்தில் கூட்டுறவு சங்கங்களுக்கு கடன் வழங்க வேண்டும்.

கூட்டுறவு சங்கங்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கு ஜி.எஸ்.டி.-யிலிருந்து விலக்கு அளிக்கப்படவேண்டும். வித்யா லட்சுமி, சூர்யா கர், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகம் திட்டங்கள் போன்ற பல்வேறு மத்திய அரசு திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு கடன் வழங்க தகுதியான வங்கிகளின் பட்டியலில், கூட்டுறவு வங்கிகள் சேர்க்கப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

23 கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையங்களின் உள்கட்டமைப்பைச் சீரமைக்க இந்திய தேசிய கூட்டுறவு ஒன்றியத்திற்கு அனுப்பப்பட்ட சுமார் ரூ.124 கோடி முன்மொழிவு சாதகமாக பரிசீலிக்க வேண்டும். கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தின் கீழ் கடன்களை சொந்த நிதியிலிரூந்து வழங்கும் வங்கிகளுக்கு 1.5% குறைக்கப்பட்ட வட்டி மானியத்தில் இருந்து 2% ஆக இந்திய அரசால் உயர்த்தி வழங்கப்பட வேண்டும்.

கிசான் கிரெடிட் கார்டு - கால்நடை பராமரிப்பு கடன்களுக்கான தனி மறுநிதிஉதவி வசதியினை விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கி பிரத்யேகமாக வழங்க வேண்டும். இணையவழி வங்கியியல் (Net Banking Services) சேவைகள் உரிமம் கூட்டுறவு வங்கிகளுக்கும் விரைந்து வழங்கப்பட வேண்டும். இவ்வாறான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

இந்த சந்திப்பின்போது கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் டாக்டர் என்.சுப்பையன் உடனிருந்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read Entire Article