
போபால்,
மத்திய பிரதேச மாநிலம் புர்ஹான்பூர் பகுதியை சேர்ந்த ராகுல்(வயது 25) என்பவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு 17 வயதான மைனர் பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. ஆனால் அந்த பெண் யுவராஜ் என்ற நபரை காதலித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், திருமணத்திற்கு பிறகும் தனது காதலை ரகசியமாக தொடர்ந்து வந்த அந்த பெண், யுவராஜுடன் இணைந்து தனது கணவன் ராகுலை கொலை செய்ய திட்டமிட்டார். இதன்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை ராகுலுடன் பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது தனது செருப்பு கழன்றுவிட்டதாக கூறி பைக்கை நிறுத்தக் கூறியுள்ளார்.
இதையடுத்து ராகுல் பைக்கை நிறுத்தியபோது, அங்கு மறைந்திருந்த யுவராஜின் நண்பர்கள் 2 பேர் ராகுலை பீர் பாட்டிலால் தாக்கினர். பின்னர் உடைந்த பாட்டிலால் ராகுலின் உடலில் சுமார் 36 முறை குத்தி கொலை செய்தனர்.
ராகுலை கொலை செய்த பிறகு, அவரது மனைவி தனது கள்ளக்காதலன் யுவராஜுக்கு வீடியோ காலில் பேசி ராகுலின் சடலத்தை காட்டியுள்ளார். பின்னர் ராகுலின் உடலை வயல் பகுதியில் வீசிவிட்டு 3 பேரும் தப்பிச் சென்று தலைமறைவாகினர்.
இதற்கிடையில் ராகுல் மற்றும் அவரது மனைவியை காணவில்லை என அவர்களது உறவினர்கள் போலீசாரிடம் புகார் அளித்தனர். பின்னர் ராகுலின் உடல் வயல் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.
இதையடுத்து கொலை வழக்கு பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த ராகுலின் மனைவி, அவரது கள்ளக்காதலன் யுவராஜ் மற்றும் யுவராஜின் நண்பர்கள் 2 பேர் என மொத்தம் 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.