
போபால்,
மத்திய பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரதீப் ஜாட்(வயது 26). இவர் காங்கிரஸ் மாணவர் அணியின் முன்னாள் மாவட்ட தலைவராக இருந்துள்ளார்.
இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றைய தினம் திருமண ஊர்வலம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு பிரதீப் ஜாட் மணமகன் அலங்காரத்துடன் குதிரை மீது ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.
அப்போது திடீரென குதிரை மீது அமர்ந்திருந்தவாறே பிரதீப் ஜாட் மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். திருமண நாளில் மணமகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதே போல், சமீபத்தில் மத்திய பிரதேசத்தின் இந்தூர் பகுதியில் திருமண விழாவிற்கு வந்த இளம்பெண் பரினீதா ஜெய்ன், மேடையில் நடனமாடிக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்து உயிரிழந்தார். மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.