மத்திய பிரதேசத்தில் தடையை மீறி பிச்சை கொடுத்தவர் மீது பாய்ந்த வழக்கு

3 months ago 12

இந்தூர்,

மத்திய பிரதேசத்தில் பிச்சை எடுப்பதும், பிச்சை கொடுப்பதும் சட்டப்பூர்வமாக தடை செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் அங்கு பிச்சைக்காரருக்கு பிச்சை போட்ட ஒருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இந்தூர் நகரில் உள்ள கோவில் முன்பு பிச்சைக்காரர் ஒருவர் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர், பிச்சைக்காரருக்கு 10 ரூபாய் பிச்சை போட்டுள்ளார்.

இதை அறிந்த பிச்சைக்கார ஒழிப்பு குழு, அடையாளம் தெரியாத வாகன ஓட்டி மீது பிச்சை தடுப்பு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தது. பிச்சை போட்ட நபர் கைது செய்யப்பட்டால் அவருக்கு இந்த சட்டப்பிரிவின் கீழ் ஒரு ஆண்டு வரை சிறை தண்டனை அல்லது ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படலாம். ஏற்கனவே கடந்த ஜனவரி 23-ந் தேதி காண்ட்வா கோவில் பகுதியில் ஒருவர் பிச்சை போட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

"இந்தூரை பிச்சைக்காரர்கள் இல்லாத முதல் இந்திய நகரமாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. கடந்த 6 மாதத்தில் 600 பிச்சைக்காரர்கள் அடையாளம் காணப்பட்டு பாதுகாப்பு இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு மறுவாழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதேபோல 100 சிறுவர்களும் மீட்கப்பட்டு உள்ளனர். பிச்சை எடுப்பவர்கள் பற்றி தகவல் தருபவர்களுக்கு ரூ.1,000 பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது" என்று பிச்சைக்காரர் ஒழிப்பு குழு அதிகாரி ஒருவர் கூறினார்.

Read Entire Article