ஊட்டி : ஊட்டி மத்திய பஸ்நிலையம் அருகே உள்ள நடைபாதை முறையான பராமரிப்பின்றி மீண்டும் திறந்தவெளி கழிப்பிடமாக மாறியுள்ளதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். ஊட்டி மத்திய பேருந்து நிலையம் எதிரில் பாறை முனீஸ்வரன் கோயில் உள்ளது.
கோயிலுக்கு அருகில் எட்டின்ஸ் சாலைக்கு செல்ல சிறு நடைபாதை உள்ளது. நாள்தோறும் ஏராளமானோர் இந்த நடைபாதை வழியாக சென்று வருகின்றனர்.
இந்த நடைபாதை போதிய பராமரிப்பின்றி மது அருந்துமிடமாகவும், திறந்தவெளி கழிப்பிடமாகவும் இருந்து வந்தது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவது மட்டுமின்றி கடும் துர்நாற்றம் வீசி வந்தது. இதனால் இந்த வழியை பயன்படுத்தும் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் பெரிதும் பாதிப்படைந்து வந்தனர். இதனை சரி செய்திட வேண்டும் என பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனை தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நகராட்சி நிர்வாகம் அப்பகுதியை சீரமைத்தது. கழிவுநீர் கால்வாய்களை தூய்மைப்படுத்தியது. இந்நிலையில் தொடர் பராமரிப்பு இல்லாததால் இப்பகுதி மீண்டும் திறந்தவெளி கழிப்பிடமாக மாறி துர்நாற்றம் வீச துவங்கியுள்ளது.
இதனால் இப்பகுதியில் பஸ்சிற்காக காத்திருக்க கூடிய பொதுமக்கள் மட்டுமின்றி நடைபாதையை பயன்படுத்துபவர்களும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் குடிமகன்கள் முகம் சுளிக்கும் வகையில் செயல்படுகின்றனர். மதுபாட்டில்கள் அதிகளவு குவிந்துள்ளது.
அழகாக சீரமைக்கப்பட்ட நடைபாதையானது, கவனிப்பின்மையால், மீண்டும் திறந்தவெளி கழிப்பிடமாக மாறியுள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே தூய்மைப்படுத்திட வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
The post மத்திய பஸ் நிலையம் அருகே சீரமைக்கப்பட்ட நடைபாதை திறந்தவெளி கழிப்பிடமாக மாறியது appeared first on Dinakaran.