மத்திய கிழக்கு நாடுகளில் அதிகரிக்கும் பதற்றம்: மூன்றாம் உலகப்போர் மூளுமா? ஈரான் பதிலடியால் அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகரும் வியூகம்

1 month ago 14

2023 அக்டோபர் 7, காலை 6.29… உலகத்தையே புரட்டிப்போட்ட சம்பவம் ஒன்று நடந்தது. அந்த நாளில்தான், காசாவில் இருந்து ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தினர். 20 நிமிடங்களில் 5,000 ராக்கெட்கள் சீறிப் பாய்ந்தன. இதில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். இது நடந்து ஓராண்டு முடியப்போகிறது. ஆயினும், போர் மேகங்கள் கலைவதாக இல்லை; மாறாக, தீவிரமாகிக் கொண்டே போகிறது. தற்போது லெபனான் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. மத்திய கிழக்கு நாடுகளை கதி கலங்க வைத்த, இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய முதல் தாக்குதலுக்கு முந்தைய நாள் வரை, இப்படி நடக்கும் என யாருமே உணரவில்லை.

உலகின் மிகச் சிறந்த உளவு அமைப்புகளில் ஒன்றாக கருதப்படும் மொசார்ட் இந்த விஷயத்தில் கோட்டை விட்டு விட்டது. ‘‘இது எப்படி நடந்தது என்றே தெரியவில்லை‘‘ என்பதுதான் உளவு அமைப்பின் பதிலாக இருந்தது. அந்த தாக்குதலின்போது கொல்லப்பட்டவர்கள் தவிர, சுமார் 250 இஸ்ரேலியர்களை பிணைக் கைதிகளாக ஹமாஸ் அமைப்பினர் பிடித்துச் சென்றனர். நவம்பரில் குறுகிய கால போர் நிறுத்தத்தின்போது பாதிப்பேர் விடுவிக்கப்பட்டனர். மீதிப்பேர் பற்றிய தகவல் இல்லை. அவர்கள் இறந்திருக்கலாம் என கருதப்படுகிறது. கடந்த ஓராண்டில் எண்ணற்ற தாக்குதல்கள், மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன. அடுத்தது என்ன நடக்கும் என்ற பதற்றம் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ளவர்களை கதி கலங்க வைத்திருக்கிறது. முதலில் காசா, அடுத்தது லெபனான், தற்போது ஏமன் என இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்து விரிவடைந்து வருகிறது.

அதாவது, காசாவில் இஸ்ரேலிய தாக்குதலை தொடர்ந்து, லெபனானில் ஹிஸ்புல்லா மற்றும் அதன் தலைவர்களுக்கு எதிரான இஸ்ரேலின் சமீபத்திய தாக்குதல்கள், இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய பெரிய ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்கள், தெற்கு சிரியாவில் ஈரான் ஆதரவு ஷியா போராளிகளால் ஜோர்டானில் 3 அமெரிக்க ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டது, வடமேற்கு சிரியாவில் இஸ்ரேல் சிறப்புப் படைகள் தாக்குதல் மற்றும் பல வான்வழித் தாக்குதல்கள்; செங்கடலில் சர்வதேச கப்பல்கள் மீதான ஹவுதி தாக்குதல்களுக்கு பதிலடியாக ஏமனில் அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் வான்வழித் தாக்குதல்கள், டெஹ்ரானில் மொசாட்டால் படுகொலை செய்யப்பட்ட ஹமாஸ் தலைவர் என தொடர்ந்து கொண்டே செல்கிறது. ஜோர்டான் மட்டுமே ஜிஹாதி தாக்குதல்களில் இருந்து மயிரிழையில் தப்பியுள்ளது.

இந்த தருணத்தில் லெபனான் மீது இஸ்ரேலிய தரை வழி தாக்குதலும் தொடங்கி விட்டது. இதற்கு ஈரான் நேற்று முன்தினம் இரவு முதல் பதிலடி கொடுக்க துவங்கி விட்டது. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போர் இப்போதைக்கு முடிவடையாது என்பது ஈரான் பதிலடி மூலம் நிரூபணம் ஆகி விட்டது. தலைநகர் டெல் அவிவ், ஜெருசலேம் உட்பட இஸ்ரேலின் அனைத்து பகுதிகளையும் குறிவைத்து இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. ஈரான் இதற்கு தகுந்த விலை கொடுக்க வேண்டி வரும் என இஸ்ரேல் எச்சரித்துள்ளது. ஈரான் ஏவுகணைகளை இடைமறித்து தாக்க அமெரிக்கா உதவியுள்ளது.

இந்த சண்டையில் அமெரிக்கா தலையிட வேண்டாம் என ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி எச்சரிக்கை விடுத்துள்ளார். இருப்பினும், இஸ்ரேலின் முக்கிய நட்பு நாடான அமெரிக்கா, இஸ்ரேலுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்க உறுதி அளித்துள்ளது. ஆயுதங்களையும் வழங்கியுள்ளது. ஹிஸ்புல்லாவுக்கு பின்னணியில் இருந்த ஈரான் நேரடியாக களம் இறங்கிய நிலையில், ரஷ்யா ஈரானுக்கு உதவிக்கு களம் இறங்கலாம். போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு பதிலாக நட்பு நாடுகள் இருதரப்பிலும் கைகோர்க்க துவங்கினால், மூன்றாம் உலகப்போர் மூளுவும் வாய்ப்பு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மைக்கேல், ஐநா சபையில் சில தினங்கள் முன்பு ஆற்றிய உரையில் , மூன்றாம் உலகப்போர் மூள வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்துள்ளார் என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

* சன்னி, ஷியா முஸ்லிம் நாடுகளின் நிலைப்பாடு
நஸ்ரல்லா கொலையான பிறகு, சன்னி முஸ்லிம்கள் தலைமையிலான பெரும்பாலான அரபு நாடுகள் அமைதி காத்தன. இஸ்ரேலுடனான உறவை சீர் படுத்துவதா அல்லது ஹஸ்புல்லாவை ஆதரிக்கும் ஈரானை எதிர்ப்பதா என்ற குழப்பம்தான் இதற்கு காரணம். ஹிஸ்புல்லாவை 32 ஆண்டாக வழி நடத்திய நஸ்ரல்லாவின் எதிரி நாடுகள் பட்டியலில் இஸ்ரேல் மற்றும் மேற்கத்திய நாடுகள் பல இருந்தன. இதனால்தான் மேற்கத்திய நாடுகள், வளைகுடா அரபு நாடுகள், அரபு லீக் ஆகியவை ஹிஸ்புல்லாவை பயங்கரவாத அமைப்பு என அறிவித்திருந்தன.

சன்னி முஸ்லிம் நாடான சவுதி அரேபியா, லெபனானில் நடக்கும் சம்பவங்கள் குறித்து கவலை தெரிவித்தாலும், நஸ்ரல்லா பற்றி எதுவுமே கூறவில்லை. இதேபோல்தான் சன்னி முஸ்லிம் நாடுகளான கத்தார், பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட் நாடுகளும் நஸ்ரல்லா கொலையானது குறித்து எதுவும் கூறவில்லை. 2011ம் ஆண்டில் ஷியா முஸ்லிம் இயக்கத்தை பஹ்ரைன் ஒடுக்கியது. இதற்கு காரணம், பஹ்ரைன் ஷியா முஸ்லிம் நாடாக இருந்தாலும், ஆட்சியாளர்கள் சன்னி முஸ்லிம் பிரிவை சேர்ந்தவர்கள் என்பதால் தான். ஆனால், சிரியாவில் மக்கள் சன்னி முஸ்லிம்களாகவும், ஆட்சியாளர்கள் ஷியாக்களாகவும் உள்ளனர்.

* பழிக்குப் பழியாக தொடரும் யுத்தம்
1995 டிசம்பர்: ஹமாசின் வெடிகுண்டு தயாரிப்பாளர் யாயா ஆயாஷை இஸ்ரேல் கொன்றது. இதற்கு பழிவாங்க 1996 பிப்ரவரி, மார்ச்சில் தற்கொலை படை தாக்குதல்களை நடத்தி 60க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்களை ஹமாஸ் கொன்றது.
2004ஏப்ரலில் ஹமாசின் மத தலைவர் ஷேக் அமகது யாசின், அப்துல் அஜீஸ் அல்ரேன்டிஸ்சியை இஸ்ரேல் ஏவுகணை வீசி கொன்றது.
2007, 2008, 2014 ஆண்டுகளில் இரு தரப்பிலும் இஸ்ரேல் – ஹமாஸ் இடையே மாறி மாறி தாக்குதல்கள் நடந்துள்ளன.
இதற்கு அடுத்ததாக கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி ஆரம்பித்த போர் இன்று வரை நின்றபாடில்லை.
1982ல் லெபனான் மீதான இஸ்ரேலின் முதல் படையெடுப்பு நிகழ்ந்தது. இதைத் தொடர்ந்து 2006ல் நடந்த லெபனான் போரில் ஹிஸ்புல்லா படையினர் எல்லை தாண்டி ஊடுருவி கொரில்லா தாக்குதலை நடத்தி 2 இஸ்ரேலிய வீரர்களை பிணையாக பிடித்தனர்; மேலும் 3 வீரர்களை கொன்றனர். 34 நாள் போரில் 121 இஸ்லாமிய வீரர்கள் இறந்தனர். தரைப்படையெடுப்பில் பல சவால்கள் இருந்தாலும், இதனை போக்கும் வகையில் ஹிஸ்புல்லாவின் பதுங்கு குழிகள் அழிப்பு, நஸ்ரல்லா உள்ளிட்ட அந்த அமைப்பின் முக்கிய தளபதிகள் கொலை, ஆயுத கிடங்குகள் அழிப்பு என அடுத்தடுத்த முன்னேற்பாடுகளை செய்துள்ளது இஸ்ரேல். முந்தைய படையெடுப்புகளில் நிகழ்ந்த கடும் அழிவின் பாடத்தில் இருந்து இந்த உத்திகளை இஸ்ரேல் தற்போது கையாள்வதாக கூறப்படுகிறது.

* அன்று நண்பன் இன்று பகைவன்
இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதல், போரை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியுள்ளது என்றாலும், இந்த இரண்டு நாடுகளும் நிரந்தர எதிரிகளாக இருந்ததில்லை. இன்னும் சொல்லப்போனால், பொது எதிரிக்காக இருவரும் கைகோர்த்த சம்பவமும் நிகழ்ந்துள்ளது. 1960-களில், இஸ்ரேலும், ஈரானும் ஈராக்கிற்கு எதிராக இணைந்து செயல்பட்டன. விரோதப் போக்கு கொண்ட அரபு ஆட்சிகளுக்கு எதிராக இஸ்ரேல் ஒரு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கையில், ஈரான், அதன் கடைசி மன்னரான ஷா என அழைக்கப்படும் முகமது ரெசா பஹ்லவியின் ஆட்சியில் இருந்தது. ஈராக் பொது எதிரியாகவே, இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் மற்றும் ஈரானின் உளவு அமைப்பான சாவக் ஆகியவை மத்திய ஈராக்கிய ஆட்சிக்கு எதிராக குர்திஷ் கிளர்ச்சியாளர்களுக்கு ஊக்கமளிப்பதில் முக்கிய பங்காற்றின. மேலும், இஸ்ரேல், ஈரான், துருக்கி ஆகிய நாடுகளை உள்ளடக்கிய முத்தரப்பு உளவு கூட்டணியை உருவாக்கின. ஷாவின் ஆட்சியின் இறுதிக்காலம் வரை இந்த உறவு அழுத்தமாக நீடித்தது.

* இஸ்ரேல் -ஈரான் ஓர் ஒப்பீடு
சமீபத்திய புள்ளி விவரங்களின்படி இஸ்ரேல் – ஈரான் ராணுவ பலம் ஓர் ஒப்பீடு
இஸ்ரேல்
* 7.52 லட்சம் ராணுவ வீரர்கள்
* ரூ.1,10,700 கோடி ராணுவ பட்ஜெட்
* 3,501 டாங்கிகள்
* 64 கடற்படையில் போர் கப்பல்கள்
* 3,106 ஏவுகணை
* 460 போர் விமானங்கள்/ஹெலிகாப்டர்கள்
* 48 நில வான் ஏவுகணை

ஈரான்
* 11.95 லட்சம் ராணுவ வீரர்கள்
* ரூ.75,440 கோடி ராணுவ பட்ஜெட்
* 1,613 டாங்கிகள்
* 261 கடற்படையில்
* போர் கப்பல்கள்
* 1,491 ஏவுகணை
* 336 போர் விமானங்கள்/ஹெலிகாப்டர்கள்
* 279 நில வான் ஏவுகணை

* பாகிஸ்தானில் வெடித்த போராட்டம்
லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் நடத்திய வான் வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து, பாகிஸ்தான் கராச்சியில் போராட்டம் வெடித்தது. ஈரான் ஆதரவு ஷியா பிரிவை சேர்ந்த மஜ்லிஸ் வகதத்துல் முஸ்லிமீன் என்ற அரசியல் கட்சி இந்த போராட்டத்தை நடத்தியது. இதில் 3,000 பேர் பங்கேற்றனர். நஸ்ரல்லாவின் படத்தை ஏந்தி, அமெரிக்காவுக்கு எதிராக கோஷமிட்டனர். இவர்களை தடுத்து நிறுத்திய காவல் துறையினர் மீது கற்கள் வீசி தாக்கி அவர்களுடன் மோதலில் ஈடுபட்டனர். கடைசியில், கண்ணீர் புகை வீசித்தான் கலவரக்காரர்களைப் போலீசால் அடக்க முடிந்தது.

* அமெரிக்காவின் நிலைப்பாடு
நஸ்ரல்லா கொல்லப்பட்ட பிறகு அறிக்கை வெளியிட்ட இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ‘‘ஆயிரக்கணக்கான இஸ்ரேலிய மக்களையும், வெளிநாட்டவரையும் கொன்று குவித்ததற்கு காரணமானவரை கொன்று கணக்கை தீர்த்து விட்டோம்‘‘ என்றார் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஹிஸ்புல்லா இயக்கத்தினரின் வெடிகுண்டு தாக்குதலில் அமெரிக்க தூதரகத்தில் இருந்த 63 பேர், அமெரிக்க கடற்படையினர் 241 பேர், பிரெஞ்சு படையினர் 58 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தை அவர் குறிப்பிட்டு இவ்வாறு தெரிவித்திருந்தார். இதன் பின்னணியில்தான், இஸ்ரேலுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோபைடன் உறுதியளித்துள்ளார்.

* ஹமாஸ் வரலாறு
இஸ்லாமிய கிளர்ச்சி இயக்கம் என்பதன் சுருக்கம்தான் ஹமாஸ். மேற்கு கரையையும் காசா நிலப்பகுதியையும் ஆக்கிரமிக்கும் இஸ்ரேலின் முயற்சிக்கு எதிரான முதல் பாலஸ்தீன எழுச்சி தொடங்கிய பின், 1987ல் ஹமாஸ் உருவானது. இதன் நோக்கம் இஸ்ரேலை அழிப்பது தான். 2005ல் காசாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகு ஹமாஸ் அரசியலில் இறங்கியது. 2006ல் பாலஸ்தீன தேர்தலில் வெற்றி பெற்றது. அதிபர் முகமது அப்பாசின் பதா இயக்கத்துடனான மோதலை தொடர்ந்து அரசியலில் இருந்து வெளியேற்றப்பட்ட காசாவிலேயே முடங்கி விட்டது. அதன் பின்னர் இஸ்ரேலுடன் 3 பெரிய போர்களில் காசா ஈடுபட்டுள்ளது.

* லெபனானில் ஷியா, சன்னி முஸ்லிம்கள் எவ்வளவு பேர்
லெபனான் பொதுவாக ஷியா முஸ்லிம் நாடாக அறியப்பட்டாலும், அங்கு ஷியா, சன்னி முஸ்லிம்கள் ஏறக்குறைய சம அளவில்தான் உள்ளனர். அதிகாரப்பூர்வ கணக்கெடுப்பு அங்கு நடைபெறாவிட்டாலும், கடந்த 2022ம் ஆண்டு வெளியிட்ட புள்ளி விவரத்தின்படி சன்னி முஸ்லிம்கள் 31.2 சதவீதம், ஷியா முஸ்லிம்கள் 32 சதவீதம் உள்ளனர் என தெரிய வருகிறது. இது தவிர கிறிஸ்தவர்கள் 32.4 சதவீதம் உள்ளனர். இந்துக்கள், பவுத்தர்கள், யூதர்கள், சிறுபான்மையினராக உள்ளனர்.

The post மத்திய கிழக்கு நாடுகளில் அதிகரிக்கும் பதற்றம்: மூன்றாம் உலகப்போர் மூளுமா? ஈரான் பதிலடியால் அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகரும் வியூகம் appeared first on Dinakaran.

Read Entire Article