மத்திய அரசுக்கு எதிராக சாலை மறியல் போராட்டம்; எஸ்.எஸ்.பாலாஜி எம்எல்ஏக்கு எதிரான வழக்கு: வரும் 20ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என சென்னை சிறப்பு நீதிமன்றம் அறிவிப்பு

2 hours ago 1

சென்னை: மத்திய அரசுக்கு எதிராக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய வழக்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜிக்கு எதிரான வழக்கில் பிப்ரவரி 20ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என சென்னை சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது. தலித் மக்கள் தாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை முறையாக அமல்படுத்தவும் அவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என கோரி கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதம் 3ம் தேதி சென்னை அண்ணா சாலை, அண்ணா சிலை அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அந்த கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி தலைமையில் நடைபெற்ற இந்த போரட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை. அனுமதியின்றி நடைபெற்ற போராட்டத்தில் கட்சியினர் சாலை மறியல் ஈடுபட்டனர். இது தொடர்பாக சென்னை திருவல்லிக்கேணி காவல்துறை எஸ்.எஸ்.பாலாஜி, செல்லதுரை, செல்வம், அப்துல் ரகுமான், ஜெகன் ஆகிய 5 பேர் மீது அனுமதியின்றி கூடுதல், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், வன்முறையை தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகள் கீழ் காவல்துறை வழக்கு பதிவு செய்தது. 2021ல் எஸ்.எஸ்.பாலாஜி சட்டமன்ற உறுப்பினரான நிலையில், இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் இறுதி விசாரணை நீதிபதி ஜி.ஜெயவேல் முன்பு நடைபெற்றது. காவல்துறை தரப்பில் குற்றச்சாட்டுக்கள் முன்னிலைப்படுத்தி வாதங்கள் வைக்கப்பட்டது .குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் அரசியல் காரணங்களுக்காக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் எனவே வழக்கில் இருந்து விடுதலை செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த பிறகும் வழக்கின் தீர்ப்பினை நீதிபதி ஜெயவேல் பிப்ரவரி 20ம் தேதி அறிவிப்பதாக தெரிவித்தார்.

 

The post மத்திய அரசுக்கு எதிராக சாலை மறியல் போராட்டம்; எஸ்.எஸ்.பாலாஜி எம்எல்ஏக்கு எதிரான வழக்கு: வரும் 20ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என சென்னை சிறப்பு நீதிமன்றம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article