![](https://media.dailythanthi.com/h-upload/2025/01/28/36271059-train.gif)
சென்னை,
பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது தொடர்பாக சமீபத்தில் யு.ஜி.சி. வெளியிட்ட வரைவு நெறிமுறைகளுக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. யுஜிசி வரைவை திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தி மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதானுக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார். மேலும், இதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற இந்தியா கூட்டணி ஆளும் மாநில முதல்-மந்திரிகளுக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் பேசியதாவது:-
வேறு எந்தவொரு செய்தியையும் திசை திருப்பி விடாமல் உயர்கல்வியில் மத்திய அரசு செய்து வருகின்ற பல்கலைக்கழக மானியக்குழு மூலம் செய்கின்ற செயல்பாடுகளை எடுத்து விளக்குவதன் மூலம் மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்பதற்காக தான் முதல் நிலையாக இந்த செய்தியை உங்களின் ஆதரவுடன் வெளியிடுகிறேன். உங்களுடைய ஆதரவு எங்களுக்கு முக்கியம்.
பல்வேறு மாநிலங்களைக் கொண்ட இந்தியாவில் மக்களின் பண்பாட்டுக்கூறான கல்வி உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை மக்களின் தேவைகளை உணர்ந்து அந்தந்த மாநில தேவைகளுக்கு தகுந்தாற்போல் உயர்கல்வி அமைப்பினை அமைத்துக் கொண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கு கல்வியில் முழு உரிமை உண்டு. அந்த உரிமைகளைப் பறிக்கும் முகமாகத்தான் 6.01.2025 வெளியான யு.ஜி.சி. வரைவு நெறிமுறைகள் மாநில உரிமைகளை பறிப்பதாக அமைந்திருக்கிறது.
மாநில அரசால் உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அந்த மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களுடைய கல்வி சார்ந்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவதற்காக தான் பல்கலைக்கழகங்கள் இதுவரை செயல்பட்டு கொண்டு வந்திருக்கிறது. அதை தடுப்பதற்காக தான் பல்கலைக்கழகங்களை யு.ஜி.சி. மூலம் கைப்பற்ற முயற்சி செய்கிறார்கள்.
'நாங்கள் சொன்னதை நீங்கள் செய்ய வேண்டும்' என்று ஒரு சர்வாதிகாரத்தோடு பல்கலைக்கழகத்தின் மீது திணிக்கக் கூடிய கருத்தாகத்தான் யு.ஜி.சி.யின் வரைவு இருக்கிறது.
வெளியிடப்பட்டுள்ள அந்த நெறிமுறைகளில் துணைவேந்தர் நியமனம் எப்படி இருக்க வேண்டும் என்பதிலும் இதுவரை உள்ள நடைமுறைகள் பின்பற்றப்படாமல் நாங்கள் நினைத்ததை செய்ய வேண்டும் என்ற அதிகாரப் போக்கு தான் உள்ளது. துணைவேந்தர் நியமனத்தில் யு.ஜி.சி. தலையிட்டு இருக்கிறது. கல்வி என்பது பொதுத்துறை நிறுவனத்தை அரசுத்துறை நடத்துவதை போல் அல்ல.
அதில் உள்ள பல்வேறு சங்கடங்கள், தேவைகள், மாணவர்கள் மனநிலை, பாடத்திட்ட வழிமுறை இவைகள் எல்லாம் கூர்ந்து பார்க்கின்ற போது தொடர்ந்து கல்விப் பணி ஆற்றிக் கொண்டிருப்பவர்கள் தான் துணைவேந்தராக நியமிக்கப்பட்டால் அது சிறப்பாக இருக்கும் என்பது தான் இதுவரை இருந்து வரும் நடைமுறை.
கல்வியாளர் அல்லாத அல்லது கல்வித்துறை சாராதவர்களை எப்படி பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக நியமிக்க முடியும்? கல்விப் பணி சாராதவர்களும் துணைவேந்தர் ஆகலாம் எனச் சொல்லி இருப்பது அந்த பல்கலைக் கழகங்களுக்கு ஏற்பட்டிருக்கும் முட்டுக்கட்டை. யு.ஜி.சி. புதிய விதிகள் மாநில உரிமைகளைப் பறிக்கின்றன. யு.ஜி.சி. வெளியிட்டுள்ள புதிய வரைவு விதிமுறைகளைத் திரும்பப் பெறவேண்டும்.
இதுபோலவே மற்ற மாநிலங்களும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று முதல்-அமைச்சர் அவர்களின் கோரிக்கையை ஏற்று கேரள சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. தெலுங்கானா முதல்-மந்திரி அவர்கள் புதிய நெறிமுறைகளுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டுவந்துள்ள இந்த வரைவு நெறிமுறைகளைத் தமிழ்நாடு அரசு ஒருபோதும் ஏற்காது. திரும்ப பெறும் வரை போராடும். அதற்கான பணிகளைத் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மேற்கொண்டு வருகின்றார்.
பல்கலைக்கழகம் உருவாக்கம், இடம், கட்டடம் கட்டுவது, ஊதியம் வழங்குவது என அனைத்தையும் செய்வது மாநில அரசு. ஆனால் துணைவேந்தர் நியமனத்தில் மட்டும் மாநில அரசிற்கு அதிகாரம் இல்லை என்று பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு கூறியிருப்பது எவ்வளவு மோசமான சர்வாதிகாரப் போக்கு என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
எதிர்வரும் 5 - 2- 2025க்குள் இந்த விவகாரத்தில் கருத்துகளை சொல்ல வேண்டும் என கேட்டு இருக்கிறார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநில முழுவதும் கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர் ஆகிய அனைவரும் பி்ப்ரவரி 5ம் தேதிக்குள் புதிய நெறிமுறைகளைத் திரும்ப பெற வேண்டும் என [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்குக் கருத்துகளை அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்
இவ்வாறு அவர் தெரிவித்தார்.