புதுடெல்லி,
70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டசபைக்கு கடந்த 5-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட்டு முடிவு நேற்று வெளியானது. இதில் 48 இடங்களில் அமோக வெற்றி பெற்று, 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பா.ஜனதா ஆட்சியை பிடித்தது. ஆம் ஆத்மி 22 இடங்களை மட்டுமே பிடித்தது.
முன்னாள் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், தான் போட்டியிட்ட தொகுதியில் தோல்வி அடைந்தார். கடந்த 2 முறை பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிக்கட்டிலில் இருந்த ஆம் ஆத்மி கட்சி, தற்போது எதிர்க்கட்சி வரிசையில் அமர உள்ளது. காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமல் பெரும் பின்னடைவை சந்தித்தது.
டெல்லி தேர்தல் முடிவுக்கு பின்னர் ஆம் ஆத்மி கட்சியின் மீது பஞ்சாப் மாநிலத்தில் அதிருப்தி வதந்திகள் பரவி வரும் நிலையில், ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான், அம்மாநில மந்திரிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுடன் டெல்லியில் உள்ள கபுர்தலா இல்லத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார்.
கட்சித் தலைவர்களின் கூற்றுப்படி, சமீபத்திய டெல்லி தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சியின் செயல்திறனை மறுபரிசீலனை செய்வது மற்றும் 2027ம் ஆண்டு பஞ்சாப் சட்டசபை தேர்தலுக்கான திட்டமிடல் குறித்து இந்த ஆலோசனையில் கவனம் செலுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பஞ்சாப் மாநிலத்தில் காலியாக உள்ள லூதியானா சட்டசபை தொகுதியில் அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.