சென்னை: “6 நாட்களுக்கு ஒரு விபத்து என்ற விதத்தில் ரயில்வே துறை இருப்பது மிக மிக ஆபத்தானதாகும். மத்திய பாஜக அரசின் நிர்வாகத் திறமையின்மையும், அலட்சியப் போக்குமே இதுபோன்ற விபத்துக்களுக்கு முக்கிய காரணம். எனவே, மத்திய பாஜக அரசு விழிப்புடன் செயல்பட்டு இனிவரும் காலங்களில் இதுபோன்ற விபத்துகளை தவிர்ப்பதற்கும், ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதிபடுத்திடவும், ரயில்வே துறையை மேம்படுத்திடவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்,” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை அருகே கவரைப்பேட்டை என்ற இடத்தில் பயணிகள் ரயில், சரக்கு ரயில் மீது மோதிய விபத்து அதிர்ச்சியளிக்கிறது. 13 பெட்டிகள் சரிந்ததில் பயணிகள் படுகாயமடைந்துள்ளனர். சிகிச்சையில் உள்ள அனைவருக்கும் உயர் சிகிச்சை உறுதி செய்யப்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வலியுறுத்துகிறோம். வெள்ளிக்கிழமை, கர்நாடகாவில் இருந்து தமிழகம் வழியாக பிஹாருக்குச் சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில், மாற்று தடத்தில் நின்றிருந்த சரக்கு ரயில் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.