காந்திநகர்: மதுவிலக்கு அமலில் இருந்தும் குஜராத்தில் ரூ.1.19 கோடி வெளிநாட்டு மதுபானம் சிக்கியது. இச்சம்பவம் தொடர்பாக 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், முக்கிய குற்றவாளிகளைப் பிடிக்க தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. மகாத்மா காந்தியின் கொள்கைகளைப் பின்பற்றி, இந்தியாவில் மிகக் கடுமையான மதுவிலக்குக் கொள்கையைக் கடைப்பிடிக்கும் மாநிலங்களில் குஜராத்தும் ஒன்று. இங்கு 1949ம் ஆண்டு முதல் மது உற்பத்தி, விற்பனை, நுகர்வு மற்றும் வைத்திருப்பது ஆகியவை சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளன.
இருப்பினும், தடையை மீறி அங்கு பிரம்மாண்ட மது கடத்தல் பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. இதற்குச் சான்றாக, கடந்த 2024ம் ஆண்டில் மட்டும் குஜராத் காவல்துறை ரூ.144 கோடி மதிப்புள்ள 82 லட்சத்துக்கும் அதிகமான மதுபான பாட்டில்களைப் பறிமுதல் செய்தது. இந்நிலையில் தற்போது பனஸ்கந்தாவில் ரூ.17 லட்சம் மதிப்புள்ள மதுபானங்களும், பிற பகுதிகளில் நடந்த சோதனைகளில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மதுபானங்களும் பிடிபட்டுள்ளன. இந்த தொடர் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, நேற்று மற்றுமொரு பிரம்மாண்ட மதுபான வேட்டையை அதிகாரிகள் நடத்தியுள்ளனர்.
சுரேந்திரநகர் மாவட்டத்தின் சோட்டிலா தாலுகாவில் உள்ள கெர்டி கிராமத்திற்கு அருகே அமைந்துள்ள பண்ணை வீட்டில் மதுபானங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக காந்திநகரில் இருக்கும் மாநில கண்காணிப்புக் குழுவிற்கு ரகசியத் தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு விரைந்த அதிகாரிகள் நடத்திய அதிரடிச் சோதனையில், சுமார் 1,000 பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த 8,596 வெளிநாட்டு மதுபான பாட்டில்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த மதுபானங்களின் மதிப்பு மட்டும் ரூ.1.19 கோடியாகும். மதுபானங்கள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட பிக்கப் வாகனம் உட்பட மொத்தம் ரூ.1.26 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இச்சம்பவம் தொடர்பாக 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், முக்கிய குற்றவாளிகளைப் பிடிக்க தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
The post மதுவிலக்கு அமலில் இருந்தும் குஜராத்தில் ரூ.1.19 கோடி வெளிநாட்டு மதுபானம் சிக்கியது appeared first on Dinakaran.