மதுரை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது அகில இந்திய மாநாடு மதுரை தமுக்கம் மைதானத்தில் நேற்று காலை துவங்கியது. மல்லாரி இசையுடன், வெண்மணி தியாகிகள் நினைவு செங்கொடி அணிவகுப்புடன் துவங்கிய மாநாட்டின் கொடியை கட்சியின் மூத்த தலைவர் பிமான் பாசு ஏற்றி துவக்கி வைத்தார். தொடர்ந்து, பொது மாநாடும், பிரதிநிதிகள் மாநாடும் நடந்தது. திரிபுரா முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் தலைமையில் நடைபெற்ற பொது மாநாட்டில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா, சிபிஐ (எம்எல்) பொதுச்செயலாளர் திபாங்கர் பட்டாச்சாரியா, ஆர்எஸ்பி கட்சி பொதுச் செயலாளர் மனோஜ் பட்டாச்சார்யா, பார்வர்ட் பிளாக் பொதுச்செயலாளர் தேவராஜன், கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இதில் தலைவர்கள் பேசியதாவது: கல்வி உட்பட மாநில அரசுகளின் அனைத்து அதிகாரங்களையும் ஒன்றிய அரசு பறித்துவிட்டது. இதனால் நாடு கூட்டாட்சித் தன்மையை இழந்துவிட்டது. நாடாளுமன்றத்தை முடக்கவும், நீதித்துறையை பலவீனப்படுத்தவும், தேர்தல் ஆணையத்தின் சுதந்திரமான அந்தஸ்தை சிதைக்கும் நடவடிக்கைகள் இன்னும் தொடர்கின்றன. எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக கொடூரமான சட்டங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பாஜ ஆளாத மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் அப்பட்டமான பாரபட்சம் உள்ளது. நாட்டில் உள்ள அனைத்து எதிர்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையிலும் சிறுபான்மையினருக்கு எதிராக பாஜ அரசு, நாடாளுமன்றத்தில் வக்பு வாரிய திருத்த சட்டத்தை தாக்கல் செய்துள்ளது.
இது வன்மையான கண்டனத்திற்குரியது. இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கடுமையாக தாக்கப்படுவது, சித்ரவதை செய்யப்படுவது, அபராதம் விதிப்பது போன்ற பல பிரச்னைகளால் பாதிக்கப்படுகின்றனர். மீனவர்கள் தாக்கப்படும்போதெல்லாம் பாதிக்கப்படுபவர்கள் இந்திய மீனவர்கள் என கருதாமல், தமிழ்நாட்டு மீனவர்கள் என்ற மாற்றான் தாய் மனப்போக்கில் பாஜ நடந்து கொள்கிறது. இச்சூழலில் தான் தமிழ்நாடு சட்டசபையில் கச்சத்தீவை மீட்கக் கோரி தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது. கச்சத்தீவு தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைவாக முடித்து தீர்ப்பை பெற வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினர் .
மாநாட்டில் இன்று மாலை 5 மணிக்கு மத்தியக் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில், ‘கூட்டாட்சி கோட்பாடே இந்தியாவின் வலிமை’ என்ற தலைப்பில் நடக்கும் சிறப்பு கருத்தரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன், கர்நாடக வருவாய்த்துறை அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடா உள்ளிட்டோர் பங்கேற்று பேசுகின்றனர். இதற்காக இன்று மாலை 3.45 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரை வருகிறார். மதுரை விமான நிலையத்தில் இருந்து அழகர்கோவில் சாலையிலுள்ள விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்ெவடுக்கிறார். இதன்பிறகு அங்கிருந்து தமுக்கம் மாநாட்டு அரங்கிற்கு செல்கிறார்.
The post மதுரையில் மார்க்சிஸ்ட் அகில இந்திய மாநாடு தொடங்கியது; ஒன்றிய அரசு மீது தலைவர்கள் கடும் தாக்கு: தமிழக, கேரள முதல்வர்கள் இன்று சிறப்புரை appeared first on Dinakaran.