மதுரை,
மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் காரில் மதுரை விமான நிலையத்தை நோக்கி புறப்பட்டார். அவரது காருக்கு பின்னால் ஏராளமான தி.மு.க. நிர்வாகிகளின் கார்கள் வந்து கொண்டிருந்தன.
தனிச்சியம் பிரிவு பகுதியில் வந்தபோது எதிர்பாராத விதமாக அதில் ஒரு கார் திடீரென, சித்தாலங்குடியை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 60) என்பவர் ஓட்டிவந்த இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராஜேந்திரன் தலையில் காயம் அடைந்தார். கால் முறிவும் ஏற்பட்டது. உடனே அவர் வாடிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை பெற்று மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து வாடிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். அந்த கார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் கார் என்றும், ஆனால் விபத்து நடந்தபோது அவர் காரில் இல்லை எனவும் போலீசார் கூறினார்கள்.