மதுரை: மதுரை மாநகரின் குடிநீர் பற்றாக் குறையைப் போக்குவதற்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டம் தொடர்ந்து தாமதமாவதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. இத்திட்டத்தை நேரடியாக ஆய்வு செய்ய அமைச்சர் கே.என்.நேரு மதுரை வரவுள்ளார். மதுரை மாநகரின் இன்றைய ஒரு நாள் குடிநீர்த் தேவை 268 மில்லியன் லிட்டர்.
ஆனால், தற்போது கிடைப்பதோ 192 மில்லியன் லிட்டர்தான். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை மாநகரில் நிரந்தரமாக குடிநீர் பற்றாக்குறை இருந்தது. கோடைக் காலங்களில் குடிநீர் பற்றாக்குறை மேலும் அதிகரித்தது. இதனால், குடிநீரையும், அன்றாட வீட்டு உபயோகத்துக்கும் மக்கள் டிராக்டர், லாரி தண்ணீரை வாங்கி பயன்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.