
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி, அடுத்த ஆண்டு (2026) நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான முன்னேற்பாடு பணிகளை செய்து வருகிறார். இதற்காக அவர் கட்சியின் வாக்குச்சாவடி முகவர்களுக்கான கருத்தரங்கை கோவையில் நடத்தினார்.
அதன்படி கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம் ஆகிய 7 மாவட்டங்களை சேர்ந்த த.வெ.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கான கருத்தரங்கு கோவை அருகே குரும்பபாளையத் தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் கடந்த 26, 27ம் தேதிகளில் நடந்தது.
சென்னையிலிருந்து கோவைக்கு ஒரு மணி நேரத்தில் விமானத்தில் வந்தாலும் கோவை விமான நிலையத்திலிருந்து அவர் தங்கி இருந்த ஹோட்டலுக்கும் ஹோட்டலில் இருந்து நிகழ்ச்சி நடைபெற்ற திருமண மண்டபத்திற்கும் விஜய் சென்று வரவே 5 மணி நேரத்திற்கும் மேல் ஆனது. வழியெங்கும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டு நின்று விஜய்யை பார்த்தனர்.
கோவை கொடுத்த வரவேற்பில் அடுத்ததாக சேலம், சென்னை, நெல்லை, மதுரை என அடுத்தடுத்த மண்டலங்களில் பூத் கமிட்டி மாநாடு நடத்த விஜய் திட்டமிட்டு இருக்கிறார். இந்த சூழலில் அடுத்ததாக மதுரையில் விஜய் பூத் கமிட்டி மதுரையில் மாநாட்டை நடத்த திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. மதுரையில் இருந்து கொடைக்கானல் செல்லும் வழியில் தற்போது இதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய், ஜனநாயகன் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக இன்று மதுரை வருகிறார். 14 வருடங்களுக்கு பிறகு, விஜய் இன்று மதுரை வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று மாலை 4 மணிக்கு மதுரை வரவிருக்கும் நிலையில், மதுரை பெருக்குடியில் வரவேற்பு அளிக்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடியில் படப்பிடிப்பு நடைபெறும் இடத்திற்கும் செல்ல இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் தவெக தலைவர் விஜய்யை வரவேற்க மதுரை விமான நிலையில் காலையிலேயே தவெக தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.