மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை பக்தர்கள் காண டிக்கெட் முன்பதிவு வருகிற 29-ந் தேதி தொடக்கம்

2 days ago 2

மதுரை,

உலகப்புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் மதுரையில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை பெருவிழா வருகிற 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்றைய தினம் காலை 10.35 மணிக்கு மேல் 10.59 மணிக்குள் மிதுன லக்கனத்தில் சுவாமி சன்னதி கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது.

மே 6-ந் தேதி முக்கிய நிகழ்ச்சியாக மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், 7-ந் தேதி திக்கு விஜயம் நடைபெறுகிறது. சிகர நிகழ்ச்சியாக மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் மே 8-ந் தேதி நடக்கிறது. அன்றைய தினம் காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் திருக்கல்யாண நிகழ்வுகள் மேற்கு, வடக்கு ஆடி வீதி சந்திப்பில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெறும். 9-ந் தேதி மாசி வீதிகளில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெறுகிறது.

மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை பக்தர்கள் நேரில் கண்டு தரிசிக்க ரூ.200, ரூ.500 கட்டண சீட்டுகள் முன்பதிவு செய்யலாம். கோவில் இணையதளமான maduraimeenakshi.hrce.tn.gov.in மற்றும் இந்து சமய அறநிலையத்துறை இணையதளமான hrce.tn.gov.in ஆகியவற்றில் வருகிற 29-ந் தேதி முதல் மே 2-ந் தேதி இரவு 9 மணி வரை முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

ஒருவர் தலா 2 ரூ.500 கட்டணச்சீட்டை மட்டுமே பெற முடியும். ரூ.200 கட்டணச்சீட்டை ஒருவர் 3 பெறலாம். ஒரே நபர் ரூ.500, ரூ.200 கட்டணச்சீட்டை பெற முடியாது. பிறந்த தேதியை சரியாக பூர்த்தி செய்து இருக்க வேண்டும். ஒரு பதிவுக்கு ஒரு செல்போன் எண் மட்டுமே பயன்படுத்த முடியும்.

மேற்கு சித்திரை வீதி பிர்லா விஷ்ரம் தங்கும் விடுதியில் ரூ.500, ரூ.200 கட்டண சீட்டை 29-ந் தேதியில் இருந்து நேரில் வந்தும் பதிவு செய்யலாம். ஆதார் நகல், புகைப்படத்துடன் அடையாள சான்று, தொலைபேசி எண், இ-மெயில் முகவரி அவசியம். ஏராளமான முன்பதிவுகள் இருந்தால் குலுக்கல் முறையில் தேர்வு செய்து செல்போன் எண், இ-மெயிலுக்கு மே 3-ந் தேதி அன்று தகவல் தெரிவிக்கப்படும்.

சம்பந்தப்பட்டோர் மே 4-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பிர்லா விஷ்ரம் தங்கும் விடுதியில் தங்களுக்கு வந்த எஸ்.எம்.எஸ்., இ-மெயிலை காண்பித்து பணம் செலுத்தி திருக்கல்யாண கட்டணச்சீட்டை பெறலாம்.

திருக்கல்யாணம் அன்று ரூ.500 கட்டணச்சீட்டு பெற்றவர்கள் வடக்கு மொட்டை முனீஸ்வரர் சன்னதி அருகில் உள்ள வழியிலும், ரூ.200 கட்டன சீட்டு பெற்றவர்கள் வடக்கு, கிழக்கு சித்திரை வீதி சந்திப்பு அருகே அமைக்கப்பட்டுள்ள பாதை வழியாக வடக்கு கோபுரம் பகுதியில் அனுமதிக்கப்படுவார்கள். எனவே அன்று காலை 5 மணியில் இருந்து 7 மணிக்குள் அவர்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் அமர்ந்து மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தை பார்க்கலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Read Entire Article