மதுரை: மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகளுக்கும் வெறும் 42 உதவி பொறியாளர்கள், இளநிலைப் பொறியாளர்களே பணிபுரிவதால், அன்றாட குடிநீர், கழிவுநீர் பராமரிப்பு பணிகள் ஸ்தம்பித்து வருவதோடு, பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகளும், புதிய சாலைப் பணிகளும் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகளில் ஒரே நேரத்தில் புதிய பாதாளசாக்கடை திட்டப் பணிகள், பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள், புதிய சாலைகள் அமைக்கும் பணிகள் நடக்கிறது. இப்பணிகளோடு, பொதுமக்களுக்கு தாமதம் இல்லாமல் முழுமையாக குடிநீர் விநியோகம் செய்வது, கழிவு நீர் அடைப்பை சரி செய்வது, சாலைகள் பராமரிப்பு போன்ற அன்றாட அத்தியாவசியப் பணிகளையும் பொறியியல் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். ஆனால், 100 வார்டுகளில் வசிக்கும் பொதுமக்கள், கட்டிடங்கள், தெருக்களுக்கு தகுந்தவாறு, பொறியியல் பிரிவில் போதுமான அதிகாரிகள் இல்லை என்றும், அதனால், மக்களுக்கான அன்றாட அத்தியவசிய பணிகளும், புதிய வளர்ச்சித்திட்டப்பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.