புதுடெல்லி: பஞ்சாபில் ஒரு சட்டசபை தொகுதியில் இடைத்தேர்தல் வரவுள்ளதால், திடீர் திருப்பமாக ராஜ்யசபா எம்பி பதவிக்கு கெஜ்ரிவால் அடிபோடுவதாக அம்மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் பரபரப்பு தகவல் தெரிவித்துள்ளார். டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி படுதோல்வியடைந்த நிலையில், மொத்தமுள்ள 70 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் பாஜக 48 இடங்களை வென்றாலும், ஆம் ஆத்மி கட்சி 22 இடங்களைப் பிடித்தது. டெல்லியின் புதிய முதல்வராக பாஜகவின் ரேகா குப்தா பதவியேற்றார்; அதேநேரம் ஆம்ஆத்மி எம்எல்ஏவும், முன்னாள் முதல்வருமான அடிசி, எதிர்க்கட்சித் தலைவரானார். சட்டப் பேரவை தேர்தலின்போது, ஆம்ஆத்மி கட்சியின் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், அவரது கேபினட் அமைச்சர்கள், எம்பிக்கள், எம்.எல்.ஏ.க்கள் உட்பட ஆம் ஆத்மி கட்சியின் பஞ்சாப் பிரிவும் டெல்லியின் ஆம் ஆத்மி வேட்பாளர்களுக்காக தீவிரமாக பிரசாரம் செய்தது.
ஆனால் தேர்தலில் ஆட்சியை பறிகொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆம்ஆத்மி தள்ளப்பட்டது. ஆம்ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான கெஜ்ரிவால், தேர்தலில் தோல்வியடைந்ததால் தற்போது அவரது அரசியல் நடவடிக்கை குறித்து பல்வேறு யூகங்கள் வெளியாகி வருகின்றன. இன்றைய நிலையில் பஞ்சாப்பில் ஆம்ஆத்மி கட்சி ஆட்சியில் உள்ளது. அங்கு ஆட்சியை தக்கவைப்பதற்காக வேலைகளை ஆம்ஆத்மி தலைமை தொடங்கியுள்ளது. இருந்தாலும், பஞ்சாப் ஆம்ஆத்மி எம்எல்ஏக்கள் தங்களுடன் தொடர்பில் இருப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் கூறி வருகின்றனர். இதுகுறித்து பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பிரதாப் சிங் பஜ்வா அளித்த பேட்டியில், ‘டெல்லியின் முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால் மாநிலங்களவைக்கு போட்டியிட வாய்ப்புள்ளது.
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஆம் ஆத்மி எம்எல்ஏ குர்பிரீத் கோகி காலமானதால், அவரது மேற்கு தொகுதி காலியாக உள்ளது. அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என்பதால், அந்த தொகுதியில் கெஜ்ரிவாலை போட்டியிட வைக்க முயற்சிகள் நடந்தன. பஞ்சாப் மக்கள் வெளிமாநில நபர்களை ஏற்கமாட்டார்கள் என்பதால், இடைத் ேதர்தலில் கெஜ்ரிவாலின் திட்டம் கைவிடப்பட்டது. அதேநேரம் ஆம்ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்பி சஞ்சீவ் அரோராவை, இடைத்தேர்தல் நடைபெறவுள்ள லூதியானா மேற்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வைக்க முயற்சிகள் நடக்கிறது. அவ்வாறு சஞ்சீவ் அரோரா இடைத்தேர்தலில் போட்டியிட்டால், அவரது எம்பி பதவி காலியாகிவிடும். அப்போது மாநிலங்களவை எம்பி தேர்தலும் நடத்த வேண்டிய சூழல் ஏற்படும்.
அந்த தேர்தலில் கெஜ்ரிவால் போட்டியிட திட்டமிட்டுள்ளார். அடுத்த 5 ஆண்டுகளுக்கு டெல்லியில் தலைகாட்ட முடியாது என்பதால், அவர் மாநிலங்களவை எம்பியாகி தேசிய அரசியலில் கவனம் செலுத்த உள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரம் பஞ்சாபை சேர்ந்த அமைச்சர்கள் உள்பட 32 ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் காங்கிரசுடன் தொடர்பில் உள்ளனர். அதேநேரம் முதல்வர் பகவந்த் மான், பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். ஆம் ஆத்மி கட்சியின் கடைசி பதவிக்காலம் என்பதை அக்கட்சியின் தலைவர்கள் அறிந்ததால், அவர்கள் எந்த கட்சிக்கு தாவலாம் என்று ஆலோசனைகளை நடத்தி வருகின்றனர். மாநில சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக பல ஆண்டுகள் இருந்துள்ளேன். எனது 45 ஆண்டுகால அரசியல் அனுபவத்தில், நான் கூறிய அரசியல் கருத்துகள் பொய்த்து போனதில்லை’ என்று திட்டவட்டமாக கூறினார்.
The post பஞ்சாபில் ஒரு தொகுதியில் இடைத்தேர்தல் வரவுள்ளதால் ராஜ்யசபா எம்பி பதவிக்கு அடிபோடும் கெஜ்ரிவால்? காங்கிரஸ் மூத்த தலைவர் பரபரப்பு தகவல் appeared first on Dinakaran.