மதுரை தொழிலதிபரிடம் ஜிஎஸ்டியை குறைக்க ரூ.3.50 லட்சம் லஞ்சம் ஜிஎஸ்டி துணை ஆணையர், 2 கண்காணிப்பாளர்கள் கைது: சிபிஐ அதிரடி; இன்ஸ்பெக்டரிடம் விசாரணை

2 months ago 12

மதுரை: ஜிஎஸ்டி வரியை குறைப்பதற்காக ரூ.3.50 லட்சம் லஞ்சம் வாங்கிய ஜிஎஸ்டி துணை ஆணையர் மற்றும் 2 கண்காணிப்பாளர்களை மதுரையில் சிபிஐ கைது செய்தது. மேலும் ஒரு இன்ஸ்பெக்டரிடம் விசாரணை நடந்து வருகிறது.
மதுரை, அப்பன்திருப்பதியை சேர்ந்தவர்கள் வடிவேல், கார்த்திக். இருவரும் கூட்டு சேர்ந்து டிரான்ஸ்போர்ட் தொழில் நடத்தி வருகின்றனர். இவர்களது கம்பெனிக்கு ஜிஎஸ்டி வரி பாக்கி இருந்தது. இதனை செலுத்துவதற்காக பீ.பீ.குளம் வருமான வரித்துறை அலுவலக வளாகத்தில் உள்ள ஜிஎஸ்டி பிரிவு ஆபீசுக்கு கார்த்திக் சென்று, துணை ஆணையர் சரவணக்குமாரை (37) அணுகினார். அவர் ஜிஎஸ்டி வரி பாக்கியில் குறிப்பிட்ட தொகையை குறைப்பதற்கு ரூ.5 லட்சம் லஞ்சமாக கேட்டுள்ளார். பேரம் பேசியதில் ரூ.3.50 லட்சத்துக்கு ஒப்புக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து கார்த்திக், சிபிஐ எஸ்பி கலைமணியிடம் புகார் அளித்தார். இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் அளித்த ஆலோசனைப்படி நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் ரூ.3.50 லட்சத்தை கொடுக்க கார்த்திக், மதுரை பீ.பீ.குளம் அலுவலகத்திற்கு சென்றார். பணத்தை அங்கு பணிபுரியும் கண்காணிப்பாளர்கள் அசோக்குமார் (45), ராஜ்பீர்சிங் ராணா (33) ஆகியோரிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த சிபிஐ எஸ்பி கலைமணி, இன்ஸ்பெக்டர் சரவணன் உள்ளிட்டோர், இருவரையும் கையும் களவுமாக பிடித்தனர்.

விசாரணையில், துணை ஆணையர் சரவணக்குமாருக்காக இந்த தொகையை வாங்கியதாக இருவரும் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மதுரை ஜிஎஸ்டி அலுவலகத்தில் 3 பேரிடமும் விசாரணை நடந்தது. இறுதியில் கார்த்திக்கிடம் ஜிஎஸ்டி பாக்கியை குறைக்க லஞ்சம் வாங்கியது உறுதி செய்யப்பட்டது. இதன்பின் மதுரை ஆத்திகுளம் பகுதியில் உள்ள சிபிஐ அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு 3 பேரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய இன்ஸ்பெக்டர் சமீர் கவுதமிடம் சிபிஐ போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் 3 பேரையும் மருத்துவப் பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு சிபிஐ அதிகாரிகள் நேற்று அழைத்துச் சென்றனர். பரிசோதனை முடிந்ததும் 3 பேரையும், மதுரை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 3 பேரையும் டிச. 31 வரை நீதிமன்ற காவலில் வைக்க சிபிஐ நீதிமன்ற நீதிபதி சண்முகவேலு உத்தரவிட்டார். இதையடுத்து 3 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

* துணை ஆணையர் வீட்டில் சிபிஐ சோதனை
கைதான துணை ஆணையர் சரவணகுமாருக்கு திருவிடைமருதூர், வி.எம்.பி நகரில் வீடு உள்ளது. இங்கு சிபிஐ டிஎஸ்பி தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் நேற்று காலை 8 மணிக்கு காரில் வந்து வீட்டை சோதனை செய்ய முயன்றனர். அப்போது, வீடு பூட்டி இருந்ததால் தகவல் அளித்து காத்திருந்தனர். 6 மணி நேரம் காத்திருப்பிற்கு பின்னர் மதியம் 2 மணிக்கு சரவணகுமாரின் அண்ணன் கண்ணன் என்பவரை வரவழைத்து வீட்டை திறந்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மாலை 6 மணி வரை நடந்த இந்த சோதனையில் முக்கிய ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் கைப்பற்றி சென்றனர்.

The post மதுரை தொழிலதிபரிடம் ஜிஎஸ்டியை குறைக்க ரூ.3.50 லட்சம் லஞ்சம் ஜிஎஸ்டி துணை ஆணையர், 2 கண்காணிப்பாளர்கள் கைது: சிபிஐ அதிரடி; இன்ஸ்பெக்டரிடம் விசாரணை appeared first on Dinakaran.

Read Entire Article