சென்னை,
தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
மத்திய ரெயில்வே மந்திரி 10.01.2025 அன்று மதுரை - தூத்துக்குடி (வழி அருப்புக் கோட்டை) புதிய அகல ரெயில் பாதை அமைக்கும் திட்டத்தை கைவிட தமிழ்நாடு அரசு கோரியதாகவும் அதனால் இத்திட்டம் கைவிடப்பட்டதாகவும் தெரிவித்ததாக செய்தி வெளிவந்துள்ளது. இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தியாகும். தமிழ்நாடு அரசு ஒருபோதும் எந்தவிதத்திலும் இவ்வாறு தெரிவிக்கவில்லை, மாறாக இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவே தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது.
மதுரை – தூத்துக்குடி (வழி அருப்புக் கோட்டை) புதிய அகல ரெயில் பாதை அமைக்கும் திட்டத்திற்கு ரெயில்வே துறையால் நிலத்திட்ட அட்டவணைப்படி 926.68.84 ஹெக்டேர் நில எடுப்பு செய்து ரெயில்வே துறைக்கு ஒப்படைக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் (மதுரை, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி) கேட்டுக் கொண்டதில், இத்திட்டம் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டு நில எடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. இதற்கான நிர்வாக அனுமதியும் வழங்கி தமிழ்நாடு அரசால் (போக்குவரத்துத் துறை) அரசாணை (நிலை) எண்.7, நாள் 24.01.2022, அரசாணை (நிலை) எண்.65, நாள் 25.04.2023 மற்றும் அரசாணை (நிலை) எண்.134, நாள் 22.09.2023 ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளது.
மேற்காணும் திட்டம் உள்ளிட்ட ஏனைய ரெயில்வே திட்டங்களுக்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்து தருமாறு 19.08.2024 நாளிட்ட கடிதம் மூலம் தமிழ்நாடு முதல்-அமைச்சர், மத்திய ரெயில்வே மந்திரியைக் கேட்டுக்கொண்டார். அப்படியொரு கடிதம் எழுதியுள்ள நிலையில், தமிழ்நாடு அரசு வேண்டாம் என்று கூறி விட்டது என ஒரு மத்திய மந்திரியே பொறுப்பற்ற முறையில் பேசலாமா? இத்திட்டத்திற்கான உரிய நிதி ஒதுக்கீடு செய்யுமாறு விருதுநகர், மதுரை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்ட ஆட்சித் தலைவர்களால் 09.08.2024, 04.09.2024, மற்றும் 27.09.2024 ஆகிய நாட்களில் முறையே தென்னக ரெயில்வே துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டு, தற்போது வரை அதற்கான பதில் ஏதும் பெறப்படவில்லை. அந்தக் கடித விவரங்களாவது மத்திய ரயில்வே துறை மந்திரிக்குத் தெரியுமா?
மேலும், 12.12.2024 நாளிட்ட அரசுக் கடிதம் மூலம் தென்னக ரெயில்வே, பொது மேலாளரிடம் தமிழக ரெயில்வே திட்டங்கள் குறித்த தற்போதைய நிலை மற்றும் நிதி நிலை அறிக்கை கேட்டுக்கொள்ளப்பட்டது. இது குறித்து தென்னக ரெயில்வே துணைத் தலைமைப் பொறியாளர் தனது கடித நாள் 19.12.2024ல் "மதுரை – தூத்துக்குடி அகல ரெயில்பாதை திட்டம் தொடர்பாக மீளவிட்டான் – மேலமருதூர் வரை 18 கி.மீ. அளவில் பணி முடிக்கப்பட்டுவிட்டது" என்றும் "மீதமுள்ள பிரிவுகளில் திட்டம் தொடர்வது தொடர்பாக தென்னக ரெயில்வேயால் இக்கருத்துரு குறைந்த சரக்கு வாய்ப்புகள் உள்ளதால் கைவிடப்பட்டதாக" தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்தினை கைவிடக்கோரி எந்தவிதமான கடிதமோ, வாய்மொழியாகவோ தமிழ்நாடு அரசால் ரெயில்வே துறைக்கு தெரிவிக்கப்படவில்லை, மாறாக இத்திட்டத்தை துரிதப்படுத்தவே தமிழ்நாடு அரசு இதுவரை கோரி வருகிறது. இத்திட்டத்தை கைவிடுமாறு தமிழ்நாடு அரசு சார்பில் கோரப்பட்டதாக கூறுவது அடிப்படை ஆதாரமற்றது என்பது மட்டுமல்ல, தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டிற்கு முற்றிலும் முரணான தகவலை மத்திய ரயில்வே துறை மந்திரியே வெளியிடலாமா? தமிழ்நாட்டின் திட்டம் என்றாலே ஓரவஞ்சனையுடன் பார்த்து, புறக்கணிக்கும் மனப்பான்மையில் செயல்படும் மத்திய பா.ஜ.க. அரசின் எண்ணவோட்டம் தமிழ்நாடு மக்களுக்குச் செய்யும் துரோகமல்லவா?
ஆகவே முதல்-அமைச்சரால் பெரிதும் வலியுறுத்தப்படும் இத்திட்டத்திற்கு உரிய நிதியை ஒதுக்கி உடனடியாக திட்டத்தை நிறைவேற்றிட வேண்டுமென மத்திய ரெயில்வே துறை மந்திரியைக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.