
தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியிலிருந்து சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 36.08 லட்சம் உதவித்தொகை காசோலைகள் மற்றும் விளையாட்டு உபகரணங்களை தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சர் உலகின் எப்பகுதியில் நடக்கும் விளையாட்டுப் போட்டிகளிலும் தமிழ்நாட்டு விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்ள பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதற்காக தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையை ஏற்படுத்தி விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தங்களுக்கு தேவையான அதிநவீன உபகரணங்களை வாங்கி கொள்ளவும், தேசிய, சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்வதற்கான செலவு, தங்குமிடம், பயிற்சி பெறுதல், பயணத்திற்கான செலவுகளை மேற்கொள்ள தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையிலிருந்து நிதிஉதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (11.7.2025) தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், ராணி மேரி கல்லூரியில் விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியிலிருந்து 20 லட்சம் ரூபாய்க்கான காசோலையை கல்லூரி முதல்வர் உமாமகேஸ்வரியிடம் வழங்கினார்.
தேசிய அளவில் பதக்கம் வென்ற சைக்கிள் வீரர் பிரஜித்துக்கு 9,08,999 ரூபாய் மதிப்பீட்டிலான அதிநவீன பந்தய சைக்கிள் உபகரணத்தை வழங்கினார். தொடர்ந்து, சமீபத்தில் கென்யாவில் நடைபெற்ற திறந்தவெளி கிராவல் வேர்ல்டு சீரீஸ் பந்தயத்தில் 6-வது இடம் பிடித்து 2025 அக்டோபர் 11-12 தேதிகளில் நெதர்லாந்தில் நடைபெறவுள்ள UCI உலக கிராவல் சாம்பியன்போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பினை பெற்ற தமிழ்நாடு சைக்கிளிங் வீரர் ஸ்ரீநாத் லஷ்மிகாந்துக்கு 2 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
மேலும், ஆசியக் கோப்பை கால்பந்து போட்டிக்கு 22 ஆண்டுகளுக்கு பிறகு தகுதி பெற்ற இந்திய அணியில் இடம்பெற்றுள்ள தமிழகத்தை சேர்ந்த கால்பந்து வீராங்கனைகள் செல்வி கார்த்திகா மற்றும் செல்வி பிரியதர்ஷிணி ஆகியோருக்கு தலா 1.50 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்.
52-வது சீனியர் தேசிய கேரம் சாம்பியன்ஷிப் - 2025 போட்டியில் பதக்கம் வென்ற தமிழ்நாடு ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினரை வாழ்த்தி, தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியிலிருந்து 2 லட்சம் ரூபாய்க்கான காசோலை உட்பட தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியிலிருந்து சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு மொத்தம் 36.08 லட்சம் உதவித்தொகை காசோலைகள் மற்றும் விளையாட்டு உபகரணங்களை துணை முதல்-அமைச்சர் வழங்கினார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.