
மதுரை,
உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழா சைவ, வைணவ சமயங்களின் ஒற்றுமைக்கு எடுத்துக்காக நடந்து வருகிறது. கடந்த 8-ந் தேதி மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம், மறுநாள் தேரோட்டம் நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நேற்று முன்தினம் விமரிசையாக நடந்தது. 15 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசித்தனர்.
பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளிய கள்ளழகர், வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவிலுக்கு நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் வந்து சேர்ந்தார். அங்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று காலை வீரராகவ பெருமாள் கோவிலில் இருந்து சேஷ வாகனத்தில் புறப்பாடாகி, வைகை ஆற்றுக்குள் உள்ள தேனூர் மண்டபத்தில் எழுந்தருளினார்.
அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்காக அங்கு குளம் போன்று வடிவமைக்கப்பட்டு அதில் தண்ணீர் நிரப்பப்பட்டு இருந்தது. அதில் பூக்களை மிதக்க விட்டு இருந்தனர். மண்டூக முனிவரின் சிலை இருந்தது. மேலும் அங்கு உயிருடன் நாரை ஒன்றும் வைக்கப்பட்டிருந்தது.
பூஜைகள் முடிந்து கள்ளழகர் கருட வாகனத்தில் எழுந்தருளி வந்து, மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார். இதை விளக்கும் விதமாக அந்த நாரை பறக்க விடப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் தேனூர் மண்டகப்படியை வலம் வந்து, கள்ளழகர் அங்கிருந்து புறப்பட்டார்.
மாலை 4 மணிக்கு அனுமன் கோவிலில் எழுந்தருளினார். அங்கு அங்கப்பிரதட்சணம் நடந்தது. பின்னர் மேளதாளம் முழங்க ஆழ்வார்புரத்தில் உள்ள ராமராயர் மண்டபத்துக்கு கிளம்பினார். அங்கு நள்ளிரவில் தசாவதார திருக்கோலங்கள் தொடங்கின. முத்தங்கி சேவை, மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், வாமன அவதாரம், ராம அவதாரம், கிருஷ்ண அவதாரம், மோகினி அவதாரம் உள்ளிட்ட அவதாரக்கோலங்களில் அழகர் காட்சி தந்தார்.
தொடர்ந்து இன்று (புதன்கிழமை) அதிகாலை 6 மணிக்கு மோகினி அவதாரத்தில் வீதி உலா வந்தார். பிற்பகல் 2 மணிக்கு ராமராயர் மண்டபத்தில் ஆனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க திருக்கோலத்தில் எழுந்தருள்கிறார். இரவு 11 மணிக்கு தல்லாகுளத்தில் உள்ள ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் திருமஞ்சனமாகிறார். நாளை அதிகாலையில் கள்ளர் திருக்கோலத்தில் பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்புரிகிறார்.
அதே திருக்கோலத்துடன் கருப்பணசாமி கோவில் சன்னதியில் இருந்து அழகர் மலைக்கு புறப்படுகிறார். பின்னர் மூன்றுமாவடி, அப்பன் திருப்பதி, கள்ளந்திரி வழியாக நாளை மறுநாள் காலை 10 மணிக்குமேல் இருப்பிடம் சேருகிறார்.