
மதுரை,
மதுரையை ஆண்ட மகாராணிக்கு சித்திரை மாதம் நடைபெறும் திருவிழா உலகப்புகழ் பெற்றது. இந்த விழாவை பிரம்மோற்சவ விழாவாக கொண்டாடுகிறார்கள். இந்தாண்டு சித்திரை திருவிழா கடந்த மாதம் 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி வரும் 12-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியின்போது உற்சவர் சிலை மீது பக்தர்கள் தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் வைபவம் நடைபெறும்.
இந்நிலையில், தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் பக்தர்கள், பொதுமக்களுக்கு அழகர் கோவில் நிர்வாகம் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன்படி, நிகழ்ச்சியின்போது பக்தர்கள் அதிக விசைத்திறன் கொண்ட குழாய்கள் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடிக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசனை திரவியம், வேதிப்பொருட்கள் அடங்கிய தண்ணீரை உற்சவர் சிலை மீது பீய்ச்சி அடிக்க வேண்டாம் எனவும், பக்தர்கள் சுத்தமான தண்ணீரை பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் விரதம் இருந்து ஐதீக முறைப்படி தோல் பையில் சிறிய குழாய் பொறுத்தி தண்ணீரை பீச்சி அடிக்க பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.