மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நடைபெற உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை காண பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. உலக பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழாவிற்காக ஒட்டு மொத்த மதுரையும் ஒரு வருடம் காத்திருக்கும் என்றே சொல்லலாம். விழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி திருக்கல்யாணம், அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் நடைபெறும்.
அந்த வகையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத்திருவிழாவில் இன்று காலை 8:35 மணி முதல் 8:59 மணிக்குள் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது. சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணத்தை பார்க்க ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர். தங்கை மீனாட்சியை சொக்கநாத பெருமானுக்கு பவளக்கனியாய் பெருமாள் தாரை வார்த்து கொடுத்தார். மீனாட்சிக்கு தங்க கிரீடம், மாணிக்க மூக்குத்தி, பச்சை கல் பதக்கம் அணிவிக்கப்பட்டது.
இதேபோன்று திருக்கல்யாணத்தையொட்டி சுந்தரேசுவர் பெருமானுக்கு கன்னத்தில் திருஷ்டி பொட்டு வைக்கப்பட்டது. கோயில் வடக்கு மேல ஆடி வீதி சந்திப்பில் உள்ள மண்டபத்தில் திருக்கல்யாணம் நடைபெற்றது. முன்னதாக திருமண வைபவ சடங்குகள் நடைபெற்று வருகிறது. கன்னி ஊஞ்சல் ஆடும் நிகழ்வு நடைபெற்றது. திருமண சடங்கான கன்னி ஊஞ்சல் ஆடும் நிகழ்வில், முத்துராமய்யர் மண்டபத்தில் மீனாட்சியம்மன் சுந்தரேசுவரர் எழுந்தருளினர்.
இதேபோன்று திருக்கல்யாண மேடை 10 டன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. 10 டன் வண்ண மலர்கள் மற்றும் 500 கிலோ பழங்கள் கொண்டு திருக்கல்யாண மேடை அலங்கரிக்கப்பட்டது. மலர்களை பொறுத்தவரை மதுரை மல்லிகை, திண்டுக்கல், நிலக்கோட்டை, ஸ்ரீரங்கம், பெங்களூர், தாய்லாந்து ஆகிய பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட வாசனை மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த திருக்கல்யாணம் விழாவில் ஒட்டு மொத்த மதுரை மக்களின் பெண்களும் தாலி கயிறை புதுப்பித்து கொள்வது வழக்கம். இதையொட்டி மதுரை நகர் விழாக் கோலம் பூண்டுள்ளது. மீனாட்சி திருக்கல்யாண வைபோகத்தில் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் திரளாக கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் கலந்துகொள்ள வரும் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு போக்குவரத்து மாற்றங்களும், பார்க்கிங் வசதிகளும் மதுரை மாநகராட்சி சார்பாகவும், கோவில் நிர்வாக குழு சார்பாகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கையாக வாகன போக்குவரத்து கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படுகின்றன. அனுமதி சீட்டுடன் வரும் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. மேலும், பக்தர்கள் இந்த அறிவிப்பை கவனத்தில் கொண்டு தங்கள் பயணத்தை திட்டமிடுமாறும் கூறப்பட்டுள்ளது.
The post மதுரை சித்திரை திருவிழா.. கோலாகலமாக நடந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்: விழாக்கோலம் பூண்ட தூங்காநகரம்..!! appeared first on Dinakaran.