அவனியாபுரம்: மதுரை விமான நிலையத்தில் தவெக தலைவர் விஜய்யின் பவுன்சர்கள், செய்தியாளர்கள் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். மேலும், ரசிகரின் தலையில் பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கியை வைத்து, சுட்டு விடுவதாக மிரட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நடிகரும், தவெக தலைவருமான விஜய் மே 1ம் தேதி திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் படப்படிப்பில் கலந்து கொள்ள தனி விமானத்தில் மதுரை வந்தார். அங்கு படப்பிடிப்புகளை முடித்துக்கொண்டு நேற்று காலை கொடைக்கானலில் இருந்து கார் மூலம் மதுரை விமான நிலையம் வந்தார். விமான நிலையத்தில் கடந்த 1ம் தேதி விஜய் ரசிகர்கள் குவிந்து பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டதால் நேற்று போலீசார் பலத்த பாதுகாப்பு வழங்கியிருந்தனர்.
காரில் இருந்து இறங்கிய விஜய் விமான நிலையத்துக்குள் செல்வதை கேமராவில் படம் பிடித்த செய்தியாளர் ஒருவரை, விஜய் உடன் வந்த பவுன்சர்கள் சிலர் தடுத்து தாக்கியதுடன் கீழே தள்ளினர். இதை கண்டும் காணாததுபோல் விஜய் விமான நிலையத்திற்குள் சென்றார். அத்துமீறி நடந்த பவுன்சர்களிடம், செய்தியாளர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர். மேலும், விஜய்யை பார்க்க பின்னால் சால்வையுடன் அவரது ரசிகரான, தவெக தொண்டர் ஒருவர் உடன் சென்றார்.
அவரை பவுன்சர்கள் தடுத்து வேறு பகுதிக்கு தள்ளிச் ெசன்றனர். இருப்பினும் தொண்டர் முன்னேறிச்செல்ல முயன்றதால், சிஆர்பிஎப் பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கியை எடுத்து அந்த தொண்டரின் தலையில் வைத்து சுட்டு விடுவதாக அச்சுறுத்தினார். இதையடுத்து அந்த நபர் அங்கிருந்து அகற்றப்பட்டார். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பின்னர் விஜய் தனி விமானம் மூலம் சென்னை புறப்பட்டு சென்றார்.
The post மதுரை ஏர்போர்ட்டில் ‘துப்பாக்கியை’ நீட்டி‘ரசிகனுக்கு’ மிரட்டல்: செய்தியாளர்கள் மீது பவுன்சர்கள் தாக்குதல் appeared first on Dinakaran.