மதுரை ஆதீனத்தின் செயல்பாடுகளால் சைவ மடங்களின் மாண்பு குறைகிறது: தமிழக சிவ பக்தர்கள் குழு கண்டனம்

1 week ago 5

ஒட்டன்சத்திரம்: மதுரை ஆதீனத்தின் செயல்பாடுகளால் சைவ மடங்களின் மாண்பு குறைந்து வருகிறது என தமிழக சிவ பக்தர்கள் குழு கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழக சிவ பக்தர்கள் குழு மாநிலத் தலைவர் விஸ்வரத்தினம் கூறியதாவது: தமிழ்நாட்டில் சைவத் திருமடங்கள் மிகவும் தொன்மையானவை. இவைகளின் கீழ் பல்வேறு கோயில்கள் உள்ளன.

இந்த கோயில்களில் மடாதிபதிகள் சைவ நெறிகளை, சைவ சித்தாந்தங்களை பக்தர்களுக்கு போதித்து சமதர்மத்தை வளர்த்து வருகின்றனர். சில மடாதிபதிகள் அரசியல்வாதிகள் போல் செயல்படுகின்றனர். தொலைக்காட்சிகளுக்கும், பத்திரிகைகளுக்கும் பேட்டியளிக்கின்றனர். அரசியல் அமைப்புச்சட்டப்படி அனைவருக்கும் பேச்சு சுதந்திரம் உள்ளது என்பதற்காக எதை வேண்டுமானாலும் பேசக்கூடாது.

கார் விபத்து குறித்து மதுரை ஆதீனம் உண்மைக்கு புறம்பாக பேசி வருகிறார். இதனால், சைவ மடங்களின் மீதான மாண்பு குறைத்து வருகிறது. மடாதிபதிகள் தங்களை பிரபலப்படுத்துவதில் முனைப்பாக உள்ளனர். சைவ நெறி சார்ந்த விழாக்களில் கலந்து கொள்வதை தவிர்த்து, வணிக நிறுவனங்களின் திறப்பு விழா உள்ளிட்ட பொது நிகழ்வுகளில் கலந்துகொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் எங்களைப் போன்ற அடியார்கள் திருக்கூட்டத்திற்கு மிகுந்த வருத்தத்தை தருகிறது.

பண்டைய காலத்தில் சைவ மடங்கள் எவ்வாறு உண்மையாக சைவத் தொண்டு புரிந்ததோ, எவ்வாறு ஏழை எளியோர்களின் பசிப்பிணியை போக்கியதோ, அதே போல மீண்டும் தரும சிந்தனை மற்றும் சமய சிந்தனையோடு செயல்பட வேண்டும். மாற்று மதத்தை அநாகரீகமாக பேசுவதை தவிர்த்து, சைவ சமய வளர்ச்சியில் பெரும்பங்காற்றவேண்டும்.இவ்வாறு கூறினர்.

The post மதுரை ஆதீனத்தின் செயல்பாடுகளால் சைவ மடங்களின் மாண்பு குறைகிறது: தமிழக சிவ பக்தர்கள் குழு கண்டனம் appeared first on Dinakaran.

Read Entire Article