மதுரை அருகே கள்ளங்காடு பகுதியில் வரி விபர கல்வெட்டு கண்டுபிடிப்பு

1 week ago 3

மதுரை : மதுரை அருகே கள்ளங்காடு பகுதியில் கண்டறியப்பட்ட துண்டுக் கல்வெட்டில் வரலாற்றுத் தடயங்கள் கிடைத்துள்ளன.மதுரை மாவட்டம், மேலூர் அருகே கள்ளங்காடு கிராமத்தில் அகளங்கீசுவரமுடைய நாயனார் என்ற சிவன் கோயில் உள்ளது. 700 ஆண்டு பழமையான இக்கோயிலின் தென்புற அதிர்ஷ்டான பகுதியில் கிபி 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிற்கால பாண்டியர்கள் காலத்தில் கோயிலுக்கு கொடுக்கப்பட்ட நில தானங்கள் பற்றியும், அந்த நிலத்தின் விளைச்சலில் ஏற்பட்ட தட்டுப்பாடு பற்றியும் தெரிவிக்கும் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. கோயிலின் மேற்புற பகுதிகளான சுவர், விமானம் போன்ற கட்டுமானங்கள் சமீபத்தில் கட்டப்பட்டுள்ளன. பல வருடங்களுக்கு முன்பாக சிதைந்த இக்கோயிலின் பாகங்கள் கோயில் வளாகம் முழுவதும் சிதறி கிடக்கின்றன. அதில் ஒரு துண்டு கல்வெட்டு மண்ணில் புதைந்த நிலையில் தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

இதனை ஆய்வு செய்த சிற்பத்துறை ஆய்வாளர் தேவி, தொல்லியல் ஆய்வாளர் அறிவு செல்வம், மதுரை இயற்கை பண்பாடு அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் தமிழ்தாசன் ஆகியோர் கூறியதாவது: தற்போது கிடைத்துள்ள இந்த கல்வெட்டு மதுரை தொல்லியல் அறிஞர் சொ.சாந்தலிங்கம் மூலம் வாசித்தறியப்பட்டதில் அரிய தகவல்கள் கிடைத்துள்ளன. இக் கல்வெட்டில் 13ம் நூற்றாண்டை சேர்ந்த வழுதி நாராயணன் என்ற வாணாதிராயர் பெயரும், நிலத்தின் வரிகள் பற்றிய நிலவரங்களை தெரிவிக்கும் விவரங்களும் காணப்படுகின்றன. மேலும் கோயில் வளாகத்தின் வெளியே சதுர வடிவ ஆவுடையார் கொண்ட சிவலிங்கமும் முகம் சிதைந்த நிலையில் நந்தி வாகனமும் உள்ளன.

13ம் நூற்றாண்டைச் சேர்ந்த கோயிலின் அப்போதைய மூலவராகவும், வாகனமாகவும் இவை இருந்திருக்கலாம். கல்வெட்டில் வழுதி நாராயணன் என்ற வாணாதிராயர் பெயர் வருவது இப்பகுதியில் 13ம் நூற்றாண்டை சேர்ந்த பிற்கால பாண்டிய மன்னரான முதலாம் மாறவர்ம சுந்தரபாண்டியன் காலத்தில் வாணாதிராயர்கள் போன்றவர்கள் வாழ்ந்ததற்கான சான்றாக உள்ளது. இக் கோயிலின் வடக்கே திருவெண்காடன் பாறை, மேற்கே மாவலி பாறை, கிழக்கே காளாங்கரை, தெற்கே வாணன் பாறை போன்ற பகுதிகள் உள்ளன.

இப்பகுதியில் 10ம் நூற்றாண்டை சேர்ந்த வட்டெழுத்துக் கல்வெட்டு, இவ்வூர் குளத்தில் 12ம் நூற்றாண்டில் கலிங்கு அமைத்தது, 17ம் நூற்றாண்டில் மாமரம் நட்டு கிணறு வெட்டியது,
18ம் நூற்றாண்டில் மடையை திருத்தி அமைத்தது போன்ற பல வரலாற்றுத் தடயங்கள் கொண்ட பகுதியாக இந்த கள்ளங்காடு வாழ்விடப் பகுதி இருக்கிறது. கள்ளங்காடுக்கு அருகே குரக்குப்படை என்ற 3500 வருடங்களுக்கு முன்பான தொல்பழங்குடிகளின் ஈமக்காடு இருப்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே மதுரையின் அரிய, பல கூடுதல் பண்பாட்டு தகவல்களை தெரிந்து கொள்ள இந்த கள்ளங்காடு பகுதியை முழு தொல்லியல் ஆய்விற்கு உட்படுத்துவது அவசியம்.இவ்வாறு தெரிவித்தனர்.

The post மதுரை அருகே கள்ளங்காடு பகுதியில் வரி விபர கல்வெட்டு கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article