மதுராந்தகம் அருகே இரு இடங்களில் வெள்ளத்தில் சிக்கிய பஸ்கள் மீட்பு

1 month ago 6

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கனமழை பெய்தது. இதனால் மாவட்டத்தின் பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரிக்கு கிளியாற்றின் வழியாகவும், ஓடைகள் வழியாகவும் அதிகளவில் தண்ணீர் சென்று ஏரி விரைவாக நிரம்பியது. தற்போது தூர்வாரும் பணி மற்றும் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் ஏரியில் உள்ள தண்ணீர் முற்றிலும் கிளியாற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் அந்த ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆற்றைத் தாண்டி வயல்வெளிகளிலும் தண்ணீர் சூழ்ந்தபடி சென்றது.

இந்நிலையில் மதுராந்தகம் அருகே நேற்று சகாய நகர் பகுதியில் புதூர் வழியாக தாம்பரம் சென்ற தனியார் பேருந்து கிளியற்றை கடக்க முயன்றபோது மழை வெள்ளத்தில் சிக்கியது. இதனையடுத்து அப்பகுதி கிராம மக்கள் பேருந்தில் பயணம் செய்தவர்களை கயிறுகட்டி பத்திரமாக காப்பாற்றினர். ஆனால் பேருந்தை மீட்க முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர் கிளியாற்றில் தண்ணீர் குறைந்ததையடுத்து பொக்லைன் இயந்திரம் மூலம் கயிறு கட்டி தனியார் பேருந்தை மீட்டனர். இதேபோல் மதுராந்தகம் அடுத்த தண்டரை பேட்டை கிராமத்தில் உள்ள கிளியாற்றின் கரை உடைந்து தண்டலம் வழியாக தீட்டாளம் செல்லும் நெடுஞ்சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

அப்போது அந்த சாலையில் காஞ்சிபுரம் அரசு போக்குவரத்து பணிமனையில் பழுது பார்த்துவிட்டு மதுராந்தகம் பணிமனைக்கு பயணிகள் இன்றி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து நிலை தடுமாறி வெள்ளத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிக்கியது. வெள்ளம் அதிகளவில் சென்றதால் பேருந்தை மீட்க முடியாமல் போனது. தண்ணீர் குறையத் தொடங்கியதையடுத்து மதுராந்தகம் போக்குவரத்துக் கழக பணிமனை ஊழியர்கள் கிரேன் மூலம் கயிறு கட்டி நேற்று பிற்பகல் பேருந்தை போராடி மீட்டனர்.

The post மதுராந்தகம் அருகே இரு இடங்களில் வெள்ளத்தில் சிக்கிய பஸ்கள் மீட்பு appeared first on Dinakaran.

Read Entire Article