திருவனந்தபுரம்,
கேரளாவை சேர்ந்த பிரபல நடிகர் பைஜு சந்தோஷ். இவர் லூசிபர், குருவாயூர் அம்பலநடையில் உள்பட 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், நடிகர் சந்தோஷ் நேற்று இரவு மதுபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டார்.
நடிகர் சந்தோஷ் மதுபோதையில் நேற்று இரவு திருவனந்தபுரம் மாவட்டம் கவுடியர் - வெள்ளயம்பாலம் சாலையில் காரை வேகமாக ஓட்டிச்சென்றார். அதிவேகமாக சென்ற கார் சாலையின் முன்னே சென்ற பைக் மீது மோதியது. இதில் பைக்கில் சென்ற நபர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். ஆனால், அவருக்கு பெரிய அளவில் காயங்கள் ஏற்படவில்லை.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து, விபத்தை ஏற்படுத்திய நடிகர் சந்தோசை இரவு 12.30க்கு கைது செய்தனர்.
மதுபோதையில் காரை ஓட்டியது, அதேவேகமாக சென்றது, விபத்தை ஏற்படுத்தியது உள்பட பல்வேறு பிரிவுகளில் சந்தோஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அதேவேளை, விபத்துக்குள்ளான பைக் உரிமையாளர் நடிகர் சந்தோஷ் மீது எந்த புகாரும் அளிக்கவில்லை. இதையடுத்து, போலீஸ் ஜாமீனில் நடிகர் சந்தோஷ் விடுதலை செய்யப்பட்டார். மதுபோதையில் காரை ஓட்டிய பிரபல நடிகர் விபத்தை ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.