
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டம் நகர்கர்க் பகுதியில் உள்ள பரபரப்பான தெருவில் நேற்று சொகுசு கார் வேகமாக வந்தது.
அந்த தெருவில் உள்ள சாலையில் சென்றுகொண்டிருந்த வாகனங்கள் மீது அந்த கார் அடுத்தடுத்து மோதியது. மேலும், சாலையோரம் நடந்து சென்றவர்கள் மீதும் வாகனம் மோதியது.
இந்த சம்பவத்தில் 9 பேர் படுகாயமடைந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் விரட்டி சென்று அந்த காரை தடுத்து நிறுத்தினர். காரை ஓட்டிவந்த நபர் மதுபோதையில் இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்த நபரை சரமாரியாக தாக்கினர்.
மேலும், படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமத்தனர். ஆனால், கார் மோதிய சம்பவத்தில் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். எஞ்சிய 6 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார், விரைந்து சென்று விபத்தை ஏற்படுத்திய நபரை கைது செய்தனர். அந்த நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் அப்பகுதியை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகி உஸ்மான் கான் என்பதும் மதுபோதையில் விபத்தை ஏற்படுத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து உஸ்மான் கானை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதேவேளை, விபத்தை ஏற்படுத்திய காங்கிரஸ் நிர்வாகி உஸ்மானை கட்சியில் இருந்து நீக்கி காங்கிரஸ் மாவட்ட தலைமை உத்தரவிட்டுள்ளது. இந்த விபத்து சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.