
சென்னை,
தமிழ்நாட்டில் அரசு மதுக்கடைகளை நடத்தும் டாஸ்மாக் நிறுவனத்திலும், மது ஆலைகளிலும் நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ.1,000 கோடி அளவுக்கு ஊழல் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.
இந்நிலையில், பேட்டியின்போது மதுவிலக்கு குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி அளித்த பதில் வருமாறு:-
தமிழ்நாட்டை சுற்றி உள்ள மாநிலங்களில் மதுவிலக்கு கிடையாது. எனவே தமிழ்நாட்டில் மட்டும் மதுவிலக்கு கொண்டு வந்தால் அருகே உள்ள புதுச்சேரிக்கு சென்று குடிக்க கூடிய சூழல் ஏற்படும். மதுவால் இளம் விதவைகள் அதிகரிக்கிறார்கள் என்று சொன்னால் அதற்கு அரசு என்ன செய்ய முடியும்?. டாஸ்மாக்கில் குடித்து ஒரு இளைஞன் இறந்துவிட்டான் என்று எந்த கிராமத்தில் இருந்து புகார் வந்தது?.
மது உடல்நலத்துக்கு கேடு. யாரும் குடிக்க வேண்டாம் என்றுதான் நாங்களும் சொல்கிறோம். சந்தர்ப்ப சூழ்நிலையை பொருத்து மதுக்கடைகள் எண்ணிக்கையை குறைப்பது பற்றி முதல்-அமைச்சர் முடிவு செய்வார்.
இவ்வாறு அவர் கூறினார்.