மது போதையில் பேருந்து ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம்: நெல்லை போக்குவரத்து போலீஸ் அதிகாரி எச்சரிக்கை

2 weeks ago 5

நெல்லையில் இருந்து சென்னை உள்ளிட்ட வெளியூர்களுக்கு செல்லும் தனியார் ஆம்னி பஸ் டிரைவர்கள் பணி நேரத்தில் மது அருந்துவதை தடுக்கும் வகையில் நெல்லை மாநகர போக்குவரத்து போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனை நடத்தினர். நெல்லை புதிய பேருந்து நிலையம் மற்றும் வண்ணாரப்பேட்டை மேம்பாலம் அருகே நடைபெற்ற இந்த சோதனையில், தனியார் ஆம்னி பஸ்களை நிறுத்தி டிரைவர் மற்றும் நடத்துனர்களை போலீசார் மது அருந்தி உள்ளனரா என்று அதற்குரிய கருவி மூலம் ஆய்வு செய்தனர்.

அப்போது நெல்லை மாநகர போக்குவரத்து உதவி கமிஷனர் அசோக்குமார், சோதனைக்கு உட்படுத்தப்பட்ட டிரைவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பேசியபோது, "நெல்லையில் இருந்து தினமும் சுமார் 40 தனியார் பஸ்கள் வெளியூர்களுக்கு செல்கின்றன. இனி அனைத்து பஸ்களும் தினமும் இரண்டு இடங்களில் சோதனை செய்யப்படும். சோதனையில் மது அருந்தியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட டிரைவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். மேலும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டால், அவர்களுக்கு வேறு எங்கும் வேலை கிடைக்காத சூழ்நிலை ஏற்படும். எனவே டிரைவர்கள் இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். பயணிகளை பத்திரமாக அழைத்துச் சென்று, பத்திரமாக திரும்பி வாருங்கள்" என்று அறிவுறுத்தினார். தொடர்ந்து இதுபோன்ற சோதனைகள் அடிக்கடி நடத்தப்படும் என போக்குவரத்து போலீசார் பஸ் டிரைவர் மற்றும் நடத்துனர்களை எச்சரித்தனர். 

Read Entire Article