
புதுடெல்லி,
நாட்டில் மத மாற்றங்கள் தொடர்பான வழக்குகளின் மனுவை வரும் 16 ஆம் தேதி சுப்ரீம்கோர்ட்டு விசாரிக்க உள்ளது. பல மாநிலங்களில் உள்ள மதமாற்றத் தடைச் சட்டங்களை சில மனுக்கள் எதிர்த்துள்ள நிலையில், கட்டாய மத மாற்றத்தில் இருந்து பாதுகாப்பு அளிக்கக்கோரி மற்றொரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அச்சுறுத்தல், மிரட்டல், பணம், பரிசு அளித்து ஆசைவார்த்தை காட்டுதல் ஆகியவை மூலம் மதமாற்றம் செய்வோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி அம்மனுவில் கூறப்பட்டுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த விசாரணையின்போது, மதமாற்றம் ஒரு தீவிர பிரச்சினை என்றும், அதற்கு அரசியல் சாயம் பூசக்கூடாது என்றும் சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்தது. மேலும், மத்திய அரசின் அட்டார்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணியின் உதவியை கோரியது.
இந்நிலையில், நிலுவையில் உள்ள இம்மனுக்கள் 16-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகின்றன. தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் சஞ்சய் குமார், கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணை நடைபெறும் என்று சுப்ரீம் கோர்ட்டு இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.