மத நல்லிணக்கத்திற்கு பெயர் பெற்ற மாநிலம் தமிழ்நாடு; திருப்பரங்குன்றம் மலையை காரணம் காட்டி மக்களிடையே ஒற்றுமையை குலைத்துவிடக் கூடாது: பாரத் இந்து முன்னணி பேரணி வழக்கில் ஐகோர்ட்டில் தமிழக அரசு வாதம்

3 months ago 6


சென்னை: தமிழ்நாடு மத நல்லிணக்கத்திற்கு பெயர்பெற்ற மாநிலமாகும் என்றும், திருப்பரங்குன்றம் மலையை காரணம் காட்டி மக்களிடையே உள்ள ஒற்றுமையை குலைத்து விடக்கூடாது என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது. பாரத் இந்து முன்னணி அமைப்பின் வடசென்னை மாவட்ட துணை தலைவர் எஸ் யுவராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், திருப்பரங்குன்றம் மலையை காக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் சென்னை ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் இருந்து கந்தகோட்டம் முருகன் கோயில் வரை பிப்ரவரி 18ம் தேதி வேல் யாத்திரை நடத்த அனுமதி கோரியிருந்தோம். பேரணி நடத்த அனுமதிக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இளைந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, திருப்பரங்குன்றம் மலையின் உரிமை குறித்து ஏற்கனவே உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இந்து முன்னணி சார்பில் போராட்டம் நடத்த அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. மத கலவரங்களை தூண்டும் வகையில் ஊர்வலத்தினர் முழக்கங்களை எழுப்பக் கூடாது என்கிற நிபந்தனையுடன் போராட்டத்திற்கு அனுமதியளிக்கப்பட்டது. ஆனால், நீதிமன்றம் உத்தரவையும் மீறி பொது அமைதிக்கும் மத நல்லிணத்திற்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியதால் முழக்கங்கள் எழுப்பியவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மனுதாரர் கேட்கக்கூடிய வழிப்பாதை மிகவும் நெருக்கடியான போக்குவரத்து நெரிசல் நிறைந்த சாலை. ஏற்கனவே திருப்பரகுன்றம் உரிமை குறித்து பிரிவியூகவுன்சில் வரை சென்று முடிவு செய்யப்பட்ட பிறகு மீண்டும் அது குறித்த பிரச்சனை எழுப்புவது சரியல்ல.

திருப்பரங்குன்றம் மலையை சுற்றியுள்ள மதுரை மாவட்டத்தில் உள்ள கோவில்களில் கூட பிராணிகளை பலியிடுவது வழக்கமாக உள்ளது. அழகர் கோவில், 18ம்படி கருப்பச்சாமி கோவில், பாண்டிமுனிஸ்வரர் கோவில், வளையாங்குளம் மலையாண்டி கருப்பச்சாமி கோவில் உள்பட பல கோவில்களில் இந்த பலியிடும் நடைமுறை உள்ளது. மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத் என்ற பெயரில் பிராணிகளை பலியிட்டு தர்காவில் சமபந்தி விருந்திற்கு அழைப்பு விடுப்பது போன்று சில சமூக விரோதிகள் பொய்யான பதிவினை வெளியிட்டுள்ளார்கள். இது சம்பந்தமாக மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத் மதுரை காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளார். சமூகங்களிடையே நிலவும் மத நல்லிணக்கத்தை கெடுக்கும் விதத்தில் சமூக விரோதிகள் திட்டமிட்டு இச்செயல்களை செய்து வருகின்றனர்.

காலங்காலமாக திருப்பரங்குன்றம் மலையை சுற்றியுள்ள மக்கள் இந்து, முஸ்லிம் மற்றும் ஜெயின் ஆகியோர் மத வேறுபாடின்றி ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். மதத்தால் மற்றும் இனத்தால் என்றென்றும் தமிழ்நாடு மக்கள் ஒரே குடும்பத்தினராக தொன்று தொட்டு வாழ்ந்து வருகின்றனர். இந்துக்களும் முஸ்லிம்களும் சகோதர சகோதரிகளாகவே இன்று வரை வாழ்ந்து வருகின்றனர். மத நல்லிணக்கத்திற்கு பெயர்பெற்ற மாநிலம் தமிழ்நாடு. திருப்பரங்குன்றம் மலையை ஓர் காரணமாக்கி இந்து, முஸ்லிம்களிடையே தேவையற்ற கலவரங்களை உருவாக்கி மக்களின் ஒற்றுமை குலைந்து விடக்கூடாது. தமிழ்நாட்டில் கோவில் நகரமாக அழைக்கப்படும் மதுரை மத நல்லிணத்திற்கு பெயர் பெற்ற புனித தலமாகும். கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள சுல்தான் அலாவுதீன் தர்காவில் இன்று வரை இந்த மதத்தை சேர்ந்த செங்குந்த முதலியார் சமூக மக்களால் வழங்கப்படும் கொடிதான் ஏற்றப்படுகிறது.

சமீபத்தில் கூட, மதுரைக்கு அருகிலுள்ள காரைக்குடியில் உள்ள ஒரு இந்த கோவில் கும்பாபிஷேகத்திற்கு முஸ்லிம் மதத்தினர் சீர்வரிசை, நன்கொடை வழங்கினார்கள். இதேபோன்று, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முஸ்லிம் சமுதாயத்தினர் விநாயக சதுர்த்தி விழாவினை கொண்டாடி ஏறக்குறைய ஆயிரம் இந்து சமுதாயத்திற்கு அன்னதானம் வழங்கினார்கள். திருப்பூர் ஒத்தப்பாளையம் கிராமத்தில் முஸ்லிம் சமுதாயத்தினர் ஒரு விநாயகர் கோவில் அமைக்க 3 சென்ட் நிலத்தை தானமாக வழங்கியதோடு அக்கோவில் குடமுழுக்கு விழாவில் இரு சமுதாயத்தினரும் ஒன்றாக பங்குக் கொண்டு சிறப்பாக விழா நடத்தினார்கள். நாகூர் தர்கா கந்தூரி விழாவில் போர்த்தப்ப்படுகிற போர்வை பழனியாண்டி பிள்ளை பரம்பரையிலிருந்து தான் இன்று வரை வழங்கப்படுகிறது. தமிழ்நாடு மத நல்லிணத்திற்கும் சமூக ஒற்றுமைக்கும் என்றும் பெயர்பெற்றது.

மத நல்லிணக்கத்தை காப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. ஒவ்வொருவரின் மத நம்பிக்கையை பாதுகாப்போம். இது போன்ற போராட்டங்களால் மதநல்லிணக்கம் பாதிக்கப்படும். மனுவில் கோரியுள்ளவாறு 18ம் தேதி ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கினால் அது தேவையற்ற விரும்பதகாத பிரச்னைகளை உருவாக்கும் என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், பேரணி நடத்த கேட்டுள்ள இடம் கூட்ட நெரிசல் மிகுந்தது. திருப்பரங்குன்றம் பிரச்னைக்கும் இதற்கும் என்ன தொடர்பு. தேவையில்லாமல் பிரச்னையை உருவாக்க பார்க்கிறீர்களா என்று கண்டனம் தெரிவித்து வேறு இடத்தை தேர்வு செய்து தெரிவிக்குமாறு மனுதாரருக்கு உத்தரவிட்டு இந்த மனு மீது நாளை உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றார்.

The post மத நல்லிணக்கத்திற்கு பெயர் பெற்ற மாநிலம் தமிழ்நாடு; திருப்பரங்குன்றம் மலையை காரணம் காட்டி மக்களிடையே ஒற்றுமையை குலைத்துவிடக் கூடாது: பாரத் இந்து முன்னணி பேரணி வழக்கில் ஐகோர்ட்டில் தமிழக அரசு வாதம் appeared first on Dinakaran.

Read Entire Article