மத சுதந்திரம் குறித்த அமெரிக்க ஆணையத்தின் அறிக்கை - இந்தியா கண்டனம்

1 month ago 15

புதுடெல்லி,

சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம்(USCIRF) சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் மத சுதந்திரம் மோசமடைந்து வருவதாக குறிப்பிட்டிருந்தது. வதந்திகள் மற்றும் தவறான தகவல்களை பரப்பி இந்தியாவில் சிறுபான்மையினர் மற்றும் அவர்களின் வழிபாட்டு தளங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவதாக அதில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவை மத சுதந்திரத்திற்கு எதிரான தொடர் அத்துமீறலில் ஈடுபடும் நாடாக அமெரிக்க அரசு வகைப்படுத்த வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், 2024-ல் இந்தியாவில் பல்வேறு தனிப்பட்ட நபர்கள் மீது நடத்தப்பட்ட கும்பல் வன்முறைகள், மத தலைவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவங்கள் மற்றும் மத வழிபாட்டு தளங்கள் இடிக்கப்பட்ட சம்பவங்களை சுட்டிக்காட்டி, அவை அனைத்தும் மத சுதந்திரத்திற்கு எதிராக நிகழ்த்தப்பட்ட அத்துமீறல்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்க ஆணையத்தின் அறிக்கைக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், "சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம்(USCIRF) ஒரு அரசியல் சார்பு நிலை கொண்ட அமைப்பாகும்.

அவர்கள் தவறான தகவல்கள் மூலம் இந்தியாவைப் பற்றிய மோசமான சித்தரிப்பை உருவாக்க முயல்கிறார்கள். இந்த அறிக்கையை நாங்கள் நிராகரிக்கிறோம். அவர்கள் முதலில் அமெரிக்காவில் நடக்கும் மனித உரிமை மீறல் தொடர்பான பிரச்சினைகளில் கவனம் செலுத்துவது நல்லது" என்று தெரிவித்துள்ளார்.

Read Entire Article