மண்டையை பிளந்தது உச்சி வெயில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த 5 பேர் உயிரிழந்தனர்: 230 பேர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

1 month ago 8

சென்னை: விமானப்படை வான் சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த 5 பேர் வெயிலின் உக்கிரத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.சுமார் 230க்கும் மேற்பட்டவர்கள் மயங்கி விழுந்தனர். இந்திய விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சி நேற்று சென்னை மெரினா கடற்கரையில் நடந்தது. இதனைப் பார்க்க சுமார் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள், குடும்பங்களுடன் மெரினா கடற்கரை பகுதியில் கூடினர். சாகச நிகழ்ச்சி பகல் 11 மணி முதல் நண்பகல் உச்சி வெயிலில் 1.30 மணி வரை நடந்தது. வெயில் காரணமாக பெரும்பாலானோர் கையில் குடைகளுடன் வந்திருந்தனர். பலர் தலையில் குல்லா அணிந்தனர். பெண்கள் ஷால்கள் அணிந்து வான் சாகசத்தை கண்டு ரசித்தனர். நீண்ட கடற்கரையான மெரினா வெட்டவெளி என்பதால் ஒதுங்கக் கூட நிழல் இல்லை. எனவே வெயிலின் உக்கிரம் தாங்காமல் ஏராளமான பெண்களும், முதியவர்களும் மயக்கம் அடித்து விழுந்தனர். அருகில் இருந்த பொதுமக்கள் தண்ணீர் தெளித்து முதலுதவி செய்து போலீஸ் உதவியுடன் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வெயில் பாதிப்பினால் உடல் சோர்வடைந்த நிலையில் சுமார் 230க்கும் மேற்பட்டோர் ஆங்காங்கே மயங்கி விழுந்ததாகவும், அதில் சுமார் 90க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள், ஓமந்தூரார் அரசு மருத்துவமனை, ராயப்பேட்டை மருத்துவமனை, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் பலர் அப்போதே சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். ஒரு சிலர் மட்டும் நேற்று இரவு வரை சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் 5 பேர் உயிரிழந்துவிட்டனர்.
பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்த சீனிவாசன் (48) தனது மகளுடன் நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டு இருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் மீட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

அதேபோல், திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் (34), தனது மனைவி மற்றும் குழந்தையுடன் பைக்கில் மெரினா கடற்கரைக்கு சாகசத்தை பார்க்க வந்தார். சாகசத்தை பார்த்துவிட்டு வீட்டிற்கு திரும்ப செல்ல பைக்கை எடுக்க முயன்ற போது, திடீரென கார்த்திகேயனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு உயிரிழந்தார். அதேபோல் சாகச நிகழ்ச்சி முடிந்து கூட்டம் கலைந்தபோது மெரினா நீச்சல் குளம் அருகே கொருக்குப்பேடையை சேர்ந்த ஜான் (56) மயங்கி கிடந்துள்ளார். அவரை மருத்துவக் குழுவினர் பரிசோதித்ததில் அவர் உயிரிழந்தது தெரியவந்தது.

அதேபோல தினேஷ் என்ற நபரும் மயக்கமடைந்து உயிரிழந்தார். காமராஜர் சாலையில் பார்த்தசாரதி கோயில் ஆர்ச் அருகே நின்று சாகசத்தை பார்வையிட்ட ஒருவரும், சுருண்டு விழந்துள்ளார். இவர், ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இவரை பற்றிய விவரம் உடனடியாக தெரியவரவில்லை. சென்னையில் சாகச நிகழ்ச்சியை காண வந்த லட்சணக்கணக்கான மக்களில் வெயிலின் கொடுமை தாங்காமல் 230-க்கும் மேற்பட்டவர்கள் மயங்கி விழுந்ததும், இதில் 5 பேர் உயிரிழந்ததும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

The post மண்டையை பிளந்தது உச்சி வெயில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த 5 பேர் உயிரிழந்தனர்: 230 பேர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு appeared first on Dinakaran.

Read Entire Article